சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக போட்டியிடும் 4 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டு விட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. விசிக உதய சூரியன் சின்னத்தில் 3 தொகுதிகளிலும், தனி சின்னத்தில் மூன்று தொகுதிகளிலும் நிற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் நிற்பதாக ஒப்பந்தம் போடப்பட்டது.
கூடுதல் தொகுதிகள் ஒதுக்கவில்லை என்றாலும், அளிக்கப்பட்டுள்ள 6 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமென அக்கட்சி முனைப்புடன் பணியாற்ற முடிவு செய்துள்ளது. விசிக சார்பில் போட்டியிடவுள்ள அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மார்ச் 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசினார். அவர் கூறும்போது, ''6 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட உள்ளோம். எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து ஒரு கலந்தாய்வு நடைபெற்றது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் அளித்தோம்.
ஏறத்தாழ 4 தொகுதிகள் ஒப்பந்தம் ஆகக்கூடிய நிலையில் உள்ளன. இன்னும் இரு தொகுதிகள் இறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன'' என்று திருமாவளவன் தெரிவித்தார்.