அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிட கேட்ட தொகுதிகளில் ஒரு அதிமுக வேட்பாளர்களை அறிவித்ததால் தமாகா கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என இரு முடிவுகளில் உள்ளதாக தெரிகிறது.
2016- சட்டப்பேரவை தேர்தலில் ஸ்டாலினுடன் பேசி திமுக கூட்டணிக்கு வரவிருந்த நிலையில் காங்கிரஸ் உடனடியாக பேசி 41 தொகுதிகள் ஒப்பந்தம் போட்டதால் மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டார் ஜி.கே.வாசன்.
படுதோல்வியை அடைந்த மக்கள் நலக்கூட்டணியிலிருந்து முதலில் வெளியேறினார் வாசன். காங்கிரஸ் , தமாகா ஒரே கூட்டணியில் இருக்க முடியாத காரணத்தால் இயற்கையாகவே அதிமுக பக்கம் ஒதுங்கினார்.
கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவுக்கு நல்ல நண்பனாக சில நேரம் இடிந்துரைத்தாலும் பல நேரம் அதிமுக அரசுக்கு பக்கபலமாக இருந்தார். பாஜகவுடன் நெருக்கமானார். அதிமுகவில் மாநிலங்களவை சீட்டு திடீரென வாசனுக்கு வழங்கப்பட்டது. பாஜக அமைச்சரவையில் அமைச்சராக ஆவார் எனக்கூறப்பட்டது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் எளிதாக இடங்களை கேட்டுப்பெறலாம் என்று ஜி.கே.வாசன் நினைத்திருந்த நிலையில் அவர் கட்சி கேட்ட 12 தொகுதிகளை வழங்க அதிமுக மறுத்து வந்தது.
அதிகபட்சம் 6 தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறி வந்த நிலையில் பல சுற்று பேச்சு வார்த்தை நடந்த நிலையில் தமாகா கேட்ட தொகுதிகளும் அதிமுகவுக்கு அளிக்கப்பட்டது.
இதனால் அதிமுக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா? என ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மதியம் ஜி.கே.வாசன் தனது நிலையை அறிவிக்க உள்ளார். அதற்குள் ஜி.கே.வாசனை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடக்கும் என தெரிகிறது.