தமிழகம்

வன்னியர் உள்ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதை ரத்து செய்யக் கோரி, தாக்கலான மனு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

தமிழக சமூக நீதிப் பேரவை பொறுப்பாளர் சின்னான்டி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் நான் சார்ந்த குரும்பக் கவுண்டர் சமூகத்தினர் 30 லட்சம் பேர் வசிக்கின்றனர். எங்கள் சமூகம் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் 108 ஜாதிகள் உள்ளன. இவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இருப்பினும், எங்கள் சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை. இதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள பல்வேறு சமூகத்தினர் உரிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்தாண்டு டிசம்பர் மாதம் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இது சட்டவிரோதம்

இந்த ஆணையம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இன்னும் அறிக்கை அளிக்காத நிலையில், சட்டப் பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இது சட்டவிரோதம் ஆகும்.

முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள ஜாதியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இட ஒதுக்கீட்டுக்குச் சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். எனவே, வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும்.

அந்த சட்டத்தை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், இதே கோரிக்கை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT