தமிழக சுகாதாரத் துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கரோனா பரவல் காரணமாக உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களின் சேம்பர்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையும் காணொலி காட்சி வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா பரவல் தொடர்பாக தவறான விவரங்களை உயர் நீதிமன்றத்துக்கு அளித்துள்ளதாகக் கூறி தமிழக சுகாதாரத் துறையைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று சென்னைஉயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் என ஏராளமானோர் நேற்று உயர் நீதிமன்ற ஆவின் நுழைவுவாயில் இருந்து பேரணியாக கோஷங்களை எழுப்பியபடி தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர்மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.