பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கடந்தஆண்டு நடைபயணம் மேற்கொண்டு சாதனை படைத்த 3 வயது பெண் குழந்தைகள் இருவர் குழந்தைகள் நல விழிப்புணர்வுக்கான தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது காஞ்சிபுரத்தில் எம்.எஸ்.ரித்திகா, கே.எஸ்.வைணவி என்ற 3 வயது குழந்தைகள் இருவர், ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’ என்ற விழிப்புணர்வுக்காக காஞ்சிபுரம் ராயன் குட்டைத் தெருவில் இருந்து நான்கு ராஜவீதிகளையும் சுமார் 3 கி.மீ. சுற்றி வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை வேலூரைச் சேர்ந்த ‘திபிரிட்ஜ்’ என்ற தனியார் அறக்கட்டளை செய்திருந்தது.
இவர்களின் சாதனை யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஜெட்லி புக் ஆஃப் ரெகார்ட்ஸ், மற்றும் பியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய புத்தகங்களில் இடம் பெற்றன. இதன் காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழு இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் நல விழிப்புணர்வு தூதர்கள் என்ற கவுரவத்தை வழங்கியுள்ளது.