தமிழகம்

எதிர்பார்த்த ராஜபாளையம்: ஏமாற்றம் இருந்தாலும் வாக்காளர்களை மறக்காத கவுதமி

செய்திப்பிரிவு

ராஜபாளையம் மக்களுக்குத் தனது சேவை தொடரும் என ட்விட்டர் பக்கத்தில் கவுதமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் எந்தக் கட்சி, எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறது என்பது கிட்டதட்ட முடிவாகிவிட்டது. ஆனால், தங்களுடைய கட்சியிலிருந்து இந்தத் தொகுதி நமக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சில வேட்பாளர்கள் முன்கூட்டியே பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள். ஆனால், தொகுதி உடன்படிக்கையில் நிகழ்ந்த மாற்றத்தால் சில வேட்பாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதில் பாஜக கட்சியிலிருந்து குஷ்பு மற்றும் கவுதமி இருவரும் முக்கியமானவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். ஏனென்றால் சேப்பாக்கம் தொகுதி நமக்கு ஒதுக்கப்படும் எனவும், ராஜபாளையம் தொகுதி நமக்கு ஒதுக்கப்படும் எனவும் இருவருமே முன்கூட்டியே தீவிரமாக களப்பணி ஆற்றத் தொடங்கினார்கள்.

ஆனால் நிலைமையோ தலைகீழானது. அதிமுக கூட்டணியிலிருந்து சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. ராஜபாளையம் தொகுதியில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே களம் காண்கிறார். அதிமுகவில் விருதுநகரிலிருந்து தொகுதி மாற முடிவு செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்காக ராஜபாளையம் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில், ராஜபாளையம் தொகுதி தங்களுடைய கட்சிக்குக் கிடைக்கவில்லை என்றாலும், தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன் என்று கவுதமி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னைப் பாவித்துக் கடந்த 5 மாதங்களாக தங்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்குத் தலைவணங்கி, உங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கிறேன். உங்கள் அன்பின் வாயிலாகக் கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன்"

இவ்வாறு கவுதமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT