அமைச்சர் நிலோபர்கபீல் வீட்டு முன்பாக திரண்டு அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என பேட்டியளித்த அதிமுக நிர்வாகிகள். 
தமிழகம்

அமைச்சர் வீரமணியால் நிலோபர் கபீலுக்கு சீட் பறிபோனதா? ஆதரவாளர்கள் போராட்டம்; தேர்தலில் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என எச்சரிக்கை

ந. சரவணன்

அமைச்சர் நிலோபர் கபீலுக்கு தேர்தலில் ‘சீட்’ வழங்காததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் வீட்டு முன்பு கூடி அதிமுகவுக்கு வாக்களிக்கப்போவதில்லை என முழுக்கமிட்டதால் வாணியம்பாடியில் இன்று சலசலப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அதன்படி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் அதிமுக போட்டியிடக்கூடிய தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைமை இன்று மாலை அறிவித்தது.

அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 13 சட்டப்பேரவை தொகுதிகளில் திருப்பத்தூர், சோளிங்கர், கே.வி.குப்பம் மற்றும் ஆற்காடு ஆகிய 4 தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் இன்று (மார்ச்-10) அறிவிக்கப்பட்டனர். இதில், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினரும், தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீலுக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை சீட் வழங்கவில்லை.

இதையறிந்த அவரது ஆதரவாளர்கள் இன்றிரவு 7.30 மணியளவில் வாணியம்பாடி கச்சேரி ரோடு, சிஜேஎன் சாலையில் உள்ள அமைச்சர் நிலோபர்கபீல் வீட்டு முன்பாக குவிந்தனர். வாணியம்பாடி நகர அவைத் தலைவர் சுபான் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் நிலோபர்கபீல் வீட்டு முன்பாக திரண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர்கபீல் பெயர் இடம் பெறாததற்கு கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

இதைதொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ வாணியம்பாடி தொகுதி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதி. இந்நிலையில், இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு இந்த முறை சீட் வழங்காததாது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

இஸ்லாமியர்களை அதிமுக கட்சி தலைமை புறக்கணித்துள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே, அமைச்சர் நிலோபர் கபீலுக்கு சீட் வழங்காதததால் இந்த முறை அதிமுகவுக்கு நாங்கள் வாக்களிக்கப்போவதில்லை, அதேபோல தேர்தல் பணியும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். அமைச்சர் நிலோபர் கபீல் சென்னையில் உள்ளார். அவர் தொகுதிக்கு திரும்பியதும், அவருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்போம்’’ என்றனர்.

வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் சூழ்ச்சியால் அமைச்சர் நிலோபர் கபீலுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை என்றும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள் என்பதால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல தொகுதிகள் இந்த முறை கைவிட்டு போக வாய்ப்புள்ளதாக அதிமுகவினர் கருத்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT