எஸ்பி.வேலுமணி, கே.அர்ச்சுனன் 
தமிழகம்

கோவையில் 10-ல் 9 தொகுதிகளில் களம் காணும் அதிமுக: 5 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

க.சக்திவேல்

கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் நிலையில் அதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கோவையில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சிங்காநல்லூர் தொகுதியைத் தவிர மற்ற 9 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, கோவையில் 2 தொகுதிகளைக் கேட்டு வந்தது.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் பட்டியல் இன்று வெளியானது. அதன்படி, கோவையில் மொத்தமுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது. தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ வி.சி.ஆறுகுட்டி, கிணத்துக்கடவு எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், வால்பாறை எம்எல்ஏ கஸ்தூரி வாசு, மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தொண்டாமுத்தூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீண்டும் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அங்கு தற்போது எம்எல்ஏவாக உள்ள அம்மன் கே.அர்ச்சுணனுக்கு கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தற்போது கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ள பி.ஆர்.ஜி. அருண்குமாருக்குக் கவுண்டம்பாளையம் தொகுதியும், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பொள்ளாச்சி தொகுதியும், சூலூர் எம்எல்ஏவாக உள்ள வி.பி.கந்தசாமிக்கு அதே தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிங்காநல்லூர் தொகுதி கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணிச் செயலாளர் கே.ஆர்.ஜெயராமுக்கும், கிணத்துக்கடவு தொகுதி முன்னாள் அமைச்சர் செ.தாமோதரனுக்கும், கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் அமுல்கந்தசாமிக்கு வால்பாறை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT