டிடிவி தினகரன்: கோப்புப்படம் 
தமிழகம்

வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம்: தினகரன் பேட்டி

செய்திப்பிரிவு

வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் வைத்திருப்பதாக, அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.

ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது.

அதேபோன்று, அமமுக கூட்டணியில், கோகுல மக்கள் கட்சிக்கும், மருது சேனை சங்கத்துக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வரும் 12-ம் தேதி தேர்தல் அறிக்கையை சென்னையில் வெளியிடுகிறார். மேலும், 15 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அமமுக இன்று (மார்ச் 10) வெளியிட்டது.

இந்நிலையில், இன்று சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "வரும் 12-ம் தேதி மாலை, ஒய்.எம்.சி.ஏ திடலில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை நாங்கள் அறிவிப்போம். மக்கள் ஆதரவைப் பெற்றவுடன் நிச்சயம் நாங்கள் அதனைச் செயல்படுத்துவோம்.

அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வரிசையாக வரும். கூட்டணி குறித்து பல கட்சிகளுடன் பேசுவோம். முடிவுக்கு வந்தவுடன் சொல்வதுதான் நமக்கும் அந்தக் கட்சிக்கும் நல்லது. அப்போதுதான் தர்ம சங்கடம் இருக்காது. நான் ஒன்றும் ரகசியம் காக்கவில்லை. முடிவுக்கு வந்தபிறகு சொல்வதுதான் நல்லது.

கடனில் தள்ளாடும் தமிழகம், எப்படி வெற்றிநடை போடும்? தமிழக அரசு வரிப் பணத்தை வீணடிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT