பி.வி.கதிரவன் | கோப்புப் படம். 
தமிழகம்

திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சிக்கு இடம் ஒதுக்கீடு

செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணியிலிருந்து பிரிந்த கட்சி திமுக கூட்டணியில் புதிதாக இணைந்தது. அதற்கு ஒரு தொகுதியை திமுக அளித்துள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. பின்னர் ஒருவாறாக தோழமைக் கட்சிகள் திமுகவுடன் ஒப்பந்தம் செய்தன. இதில் காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகியவை தலா 6 தொகுதிகளிலும் போட்டியிருகின்றன. கொமதேக 3, ஐயூஎம்எல் 3, மமக 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என மொத்தம் 54 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் நிற்கின்றன.

இதில் திமுகவினர் 174 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். 13 தொகுதிகளில் கூட்டணிக் கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் உதயசூரியன் சின்னம் 187 இடங்களில் போட்டியில் உள்ளது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் பெரும்பாலான தொகுதிகளை திமுக இறுதிப்படுத்திவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை திடீரென அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி திமுக கூட்டணியில் இணைந்தது. பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், திமுக தலைவர் ஸ்டாலினுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டு ஒரு தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் செய்தார்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி 2011-ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்றது. 2016-ல் அதிலிருந்து விலகியது. பின்னர் திமுக கூட்டணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தது. இம்முறை திமுக கூட்டணியில் அதற்கு ஒரு இடம் அளிக்கப்பட்டுள்ளது. பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன் உசிலம்பட்டியில் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT