பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்தவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில், 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.யான கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 10) விசாரணைக்கு வந்தது.
ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும், விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.
மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு தொடர்பாக 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், வீடியோ ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.