பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது தொடரப்பட்டுள்ள வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஓய்வுபெற்ற கூடுதல் எஸ்.பி. உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இதுதொடர்பாக சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்பிசிஐடி கூடுதல் எஸ்.பி.யான கே.ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
பெண் எஸ்.பி. ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தமூத்த ஐபிஎஸ் அதிகாரி கட்டாயகாத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குற்றவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணி இடைநீக்கம்
இவர் இதேபோல ஏற்கெனவேவேறு ஒரு பெண் அதிகாரிக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தற்போது மீண்டும் ஒரு பெண் எஸ்.பி.க்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சமூகத்தை குற்றங்களில் இருந்து காக்க வேண்டிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி, நேரடியாக தேர்வுசெய்யப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்றால் அவரது நோக்கம் என்னவென்று வெளிப்பட்டுவிடும்.
அவருக்கு கடுமையான தண்டனைவழங்கினால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறையில் நிகழாது. ஒரு மூத்த ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான புகாரை அவருக்கு கீழ் உள்ள சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் வெளிப்படையான விசாரணையாக அது இருக்காது.
இந்த மூத்த அதிகாரியின் மனைவியும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதால் அரசும் அதிகாரிகளும் மென்மையான போக்கையே கையாளுவர். வழக்கை வாபஸ் பெறும்படி பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்து அவருக்கு மேலும் மன உளைச்சலைத்தான் அதிகப்படுத்துவர். சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தொடங்கினாலும் தொடர்புடையவர்களுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் குற்றவியல் சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிபோலீஸார் விசாரித்தால் விசாரணை முறையாக நடக்காது. மூத்த ஐபிஎஸ்அதிகாரி என்பதால் அவரோ அல்லது அவருக்கு வேண்டப்பட்டவர்களோ இந்த விசாரணையில் துறை ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ தலையீடு செய்யக்கூடும். எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.