தமிழகம்

தீபாவளி: நெல்லைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள்

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூரில் இருந்து நாளை (7-ம் தேதி), 9-ம் தேதிகளில் காலை 7 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06120) இரவு 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல், வரும் 8, 11-ம் தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து காலை 9.20 புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் (06121) இரவு 11.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்கள் தலா 9 பெட்டிகள் கொண்டதாகும். தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், திருபாதிரிபுலியூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தண்ணீர் ஏற்பாடு அவசியம்

இது தொடர்பாக சென்னை கோட்ட ரயில் பயணிகள் ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் கே.பாஸ்கர் கூறுகையில், ‘‘வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் புறப்படும் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில்பெட்டிகளை பராமரிப்பதற்கும் நேரம் ஒதுக்கீடு செய்ய பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால், சிறப்பு ரயில்களில் உதிரியாக இருக்கும் ரயில்பெட்டிகளை இணைத்து இயக்கப்படுகின்றன.

இதனால், முழுமையான பராமிப்பு பணிகள் இல்லாமல் இருக்கின்றன. மேலும், ரயில்பெட்டிகளில் கழிப்பறைகளில் போதிய தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முழுமையான தண்ணீர் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டோர் ரயில்பெட்டிகளில் வந்து பயணிகளுக்கு தொந்தரவு செய்கின்றனர். இதை தடுக்கும் வகையில் ரயில்வே போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

SCROLL FOR NEXT