அமமுக கூட்டணியில், கோகுல மக்கள் கட்சிக்கும், மருது சேனை சங்கத்துக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.
ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியுடன் அமமுக கூட்டணி அமைத்துள்ளது. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமமுக கூட்டணியில், கோகுல மக்கள் கட்சிக்கும், மருது சேனை சங்கத்துக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தினகரன் இன்று (மார்ச் 9) வெளியிட்ட அறிவிப்பில், "06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், கோகுல மக்கள் கட்சியும், மருது சேனை சங்கமும் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமமுக தலைமையிலான கூட்டணியில், கோகுல மக்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் தளி (56) சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மருது சேனை சங்கத்திற்கு தமிழ்நாட்டில் திருமங்கலம் (196) சட்டப்பேரவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.