கரூரில் பட்டியல் வகுப்பினர் தானமாக வழங்கிய நிலத்தில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட மறுப்பது துரதிர்ஷ்டவசமானது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குளித்தலையைச் சேர்ந்த ஆண்டியப்பன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
பொம்மிநாயக்கன்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு போதுமான இடவசதியில்லை. இதனால் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த நானும், என் கிராமத்தைச் சேர்ந்த பலரும் பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக ஒரு ஏக்கர் 85 சென்ட் நிலத்தை பள்ளிக்கு தானமாக வழங்கினோம். அதில் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை கட்டிடம் கட்டவில்லை.
இது குறித்து விசாரித்த போது நாங்கள் கொடுத்த இடத்தில் பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்ட வேறு சமூகத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் நாங்கள் தானமாக வழங்கிய இடத்தில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு தவறானது.
எனவே, பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் நாங்கள் தானமாக வழங்கிய நிலத்தில் பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் லஜபதிராய், திருமுருகன் வாதிட்டனர்.
பின்னர் நீதிபதிகள், பட்டியல் வகுப்பினர் தானமாக வழங்கிய இடத்தில் பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்ட மறுப்பது துரதிர்ஷ்டவசமானது. தானமாக வழங்கப்பட்ட இடத்தை கரூர் மாவட்ட துணை ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அந்த இடத்தில் பள்ளியின் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான சாத்தியம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.