தமிழகம்

புதுச்சேரியில் காங்கிரஸைக் கரைத்து நெருக்கடி தரும் முன்னாள் அமைச்சர்கள்: சமாளிப்பாரா நாராயணசாமி?

செ.ஞானபிரகாஷ்

காங்கிரஸ் கட்சியைக் கரைத்து நெருக்கடி தரும் வகையில் நிர்வாகிகளை பாஜகவுக்கும், என்.ஆர்.காங்கிரஸுக்கும் முன்னாள் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் இழுப்பதால் கடும் நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளார்.

புதுவை மாநிலம் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது. அதிக முறை காங்கிரஸ் ஆட்சியே அமைந்துள்ளது. கட்சியில் பல முறை பிளவு ஏற்பட்டாலும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், தற்போதைய தேர்தலில் காங்கிரஸுக்குக் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாள்தோறும் கட்சியிலிருந்து நிர்வாகிகள், வேட்பாளர் பிரமுகங்கள் பதவி விலகி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் சூழலைப் பயன்படுத்தி, கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக கூடுதல் தொகுதிகளைக் கேட்டு நெருக்கடி தருகிறது. ஒரு கட்டத்தில் கூட்டணிக்குத் திமுகதான் தலைமை வகிக்கும் எனக் கூறுகின்றனர். இதனால்தான் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தேசியக் கட்சியான காங்கிரஸுக்குக் கடும் நெருக்கடியை அளித்துள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமி முதல்வரானார். அதனால் முதல்வர் பதவி தனக்குக் கிடைக்கும் என்று நினைத்திருந்த நமச்சிவாயம் கடும் அதிருப்தியில் இருந்தார். காங்கிரஸ் தலைவர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைதியாக இருந்து அவர், இறுதிக் கட்டத்தில் பாஜகவுக்குச் சென்றார். அதைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் அடுத்தடுத்து விலகி பாஜகவில் இணைந்தனர். நமச்சிவாயத்தைத் தொடர்ந்து மாநிலம், மாவட்டம், அணி, தொகுதி, வட்டார அளவில் காங்கிரஸில் விரிசல் ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம்

நமச்சிவாயத்தைத் தொடர்ந்து பலரும் பாஜகவில் இணைந்தனர். தங்கள் கட்சி நிர்வாகிகள் வெளியேறுவதைத் தடுக்க கட்சி, புதிய மாநில நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டது. கடந்த காலத்தில் 40 பேர் மட்டுமே அதிகபட்சமாக மாநில நிர்வாகிகளாக இருந்தனர். மாநில நிர்வாகி பதவிக்கு வர காங்கிரஸாருக்கு சுமார் 15 வருடங்கள் கட்சியில் உழைப்பு தேவைப்படும்.

தொகுதி, மாவட்டம், தொழிற்சங்கம், அணி எனப் பல கட்டங்களைத் தாண்டி மாநிலப் பதவியை அடைவர். ஆனால், கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவைத் தடுக்க மாநிலப் பதவிகளை 90 ஆகக் காங்கிரஸ் உயர்த்தியது. ஆனாலும் பயனில்லை. தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் காங்கிரஸிலிருந்து வெளியேறி வருகின்றனர். ஒரு பக்கம் நமச்சிவாயம் காங்கிரஸிலிருந்து நிர்வாகிகளை பாஜகவில் இணைக்கின்றார்.

அதேநேரத்தில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் மவுனமாக இருந்து திடீரென்று அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து விட்டு என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவு தந்ததுடன் காங்கிரஸிலிருந்து பலரையும் இழுக்கத் தொடங்கியுள்ளார். காங்கிரஸிலிருந்து முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன், காங்கிரஸ் செயல் தலைவர் ஏ.கே.டி. ஆறுமுகம், வட்டாரத் தலைவர் கே.எஸ்.பி. ரமேஷ் உள்ளிட்டோர் தொடங்கி பலரும் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

உச்சக்கட்டமாக ரங்கசாமி ஏனாம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து அவருக்காக வாக்கு சேகரிப்பையும் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கியுள்ளார். வேட்பாளரே அறிவிக்காத சூழலில் பிரச்சாரத்தை ஏன் தொடங்கினார் என்றும் பலரும் வியப்பு தெரிவிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

இதுபற்றி காங்கிரஸ், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, "முதல்வர் பதவியைக் குறிவைத்து நமச்சிவாயம் பாஜகவில் இணைந்து, காங்கிரஸில் உள்ள தனது ஆதரவாளர்களை இழுக்கிறார். ராஜ்யசபா எம்.பி. பதவியைக் குறிவைத்து மல்லாடி கிருஷ்ணராவ் என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவாக காங்கிரஸில் இருந்து ஆட்களை இழுக்கிறார்.

இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸிலிருந்து நிர்வாகிகளை இழுக்கும் சூழலில் அதைச் சமாளிக்கவும், கூட்டணிக் கட்சியான திமுகவின் அடுத்த காய் நகர்த்தலையும் நாராயணசாமி எப்படி வரும் தேர்தலில் சமாளிக்கப் போகிறார் என்பதே தற்போதைய கேள்வி.

காங்கிரஸில் முக்கியமானவராக உள்ள நாராயணசாமி எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT