சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் கட்சியை விட்டு வேறு கட்சிக்கு மாறும் நிர்வாகிகளால் யார் எந்தக் கட்சி என்பதில் குழப்பம் நிலவுகிறது. குறிப்பாக காங்கிரஸில் இருந்து என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் பலரும் சென்றுள்ளனர்.
புதுச்சேரியில் முன்பெல்லாம் எம்எல்ஏக்கள் கட்சி மாறியதால் ஆட்சி கவிழும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி உள்ளது. வெவ்வேறு கட்சியில் இணைந்து பதவிகளைப் பெற்று ஆட்சி புரிந்தோரும் உண்டு. சிலர் அனைத்துக் கட்சிகளிலும் சென்று ஒரு சுற்று அரசியல் பயணத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். சிறிய ஊரான புதுச்சேரியில் காலையில் கடுமையாக விமர்சித்துப் பேட்டி தந்துவிட்டு, மாலையில் ஒன்றாக இணைந்து வாக்கிங் செல்லும் அரசியல்வாதிகளும் பலருண்டு.
பிரெஞ்சு ஆட்சியில் இருந்து புதுச்சேரி விடுபட்ட நாள் முதல் புதுவையில் நீண்டகாலமாகக் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரஸ் முதல்வர் பாரூக் மரைக்காயர், திமுகவில் முதல்வராக இருந்த விசித்திரங்களும் புதுவையில் அரங்கேறியுள்ளன. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்கு வரும் முன்பே 1974-ல் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று அதிமுகவைச் சேர்ந்த ராமசாமி முதல்வரானார்.
1977-ல் அதிமுக வெற்றி பெற்றபிறகு மீண்டும் ராமசாமி முதல்வரானார், ஆனால் இந்த ஆட்சி சொற்பக் காலத்தில் கவிழ்ந்தது.
அதிகளவில் கோஷ்டிப் பூசல், பிளவைச் சந்தித்த கட்சி காங்கிரஸ். தமிழகத்தில் தமாகாவை மூப்பனார் தொடங்கியபோது கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் கண்ணன் புதுவை காங்கிரசிலிருந்து வெளியேறி தமாகாவைத் தொடங்கினார். அப்போது காங்கிரஸில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டது. பின்னர் மீண்டும் காங்கிரசில் 2 முறை இணைந்து, விலகி, புதுக் கட்சிகளைக் கண்ணன் தொடங்கிய வரலாறும் உண்டு.
அதேபோல் கடந்த 2008-ல் முதல்வராக இருந்த ரங்கசாமியைப் பதவியிலிருந்து காங்கிரஸ் நீக்கியது. இதனையடுத்து 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் என்ற தனிக் கட்சியைத் தொடங்கிய ரங்கசாமி, ஆட்சியையும் பிடித்தார். அப்போது காங்கிரஸில் இருந்து பலர் வெளியேறினர்.
தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நமச்சிவாயம் காங்கிரசிலிருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோரும் பா.ஜனதாவில் இணைந்துள்ளனர். திமுகவிலிருந்து வெங்கடேசனும் பாஜகவில் இணைந்துவிட்டார். அதேபோல் காங்கிரஸில் இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் அமைச்சர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் லட்சுமி நாராயணன் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்து விட்டார். தற்போது தனிக்கட்சி நடத்தி வரும் முன்னாள் அமைச்சர் கண்ணன் பாஜக பக்கம் சாய்கிறார்.
நமச்சிவாயத்தால் கட்சி நிர்வாகிகளின் விலகல் அதிகரித்ததால் நிர்வாகிகளின் எண்ணிக்கையை 90 ஆகக் காங்கிரஸ் உயர்த்தியும் பலர் வெளியேறுகின்றனர். பல நிர்வாகிகள் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் என இணைகின்றனர். அடுத்தகட்டமாக என்.ஆர்.காங்கிரஸிலிருந்தும் பாஜகவுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். என்.ஆர்.காங்கிரஸில் இருந்து முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், முன்னாள் எஸ்பி பைரவசாமி ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இணையத்தில் அவர் இக்கட்சியில் இணைகிறார் என்ற தகவல் முதலில் வதந்தியாக பரப்பப்பட்டு, கருத்துகளை அறிந்து பின்னர் இணைவோரும் அதிகரித்துள்ளனர்.
அதனால் யார் எக்கட்சியில் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழும் அரசியல் சூழல் உள்ளது. வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகே யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதை உறுதியாக கூறமுடியும் என்ற நிலை புதுச்சேரியில் உருவாகியுள்ளது. இதுவும் அடுத்த தேர்தல் வரையில்தான்... அதன்பிறகு அடுத்த தாவல் தொடங்கும்.