சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்து இருந்தாலும் அமமுக தேர்தல் பிரச்சாரத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படுவாரா? அவரது புகைப்படம் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானதும் சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அவரது வருகை அமமுகவுக்கு சாதகமாகவும், தங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துமோ? என்றும் அதிமுகவினர் கலக்கம் அடைந்து இருந்தனர்.
சசிகலாவுக்கும் தமிழக எல்லையான ஓசூர் முதல் சென்னை வரை அக்கட்சியினர் வழிநெடுக பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் கிருஷ்ணகிரியில் பேட்டியளித்த போது, ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் அவரோடு திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது அமமுகவினர் மத்தியில் சோர்வையும், அதிமுகவினர் மத்தியில் நெருக்கடி குறைந்து ஆறுதலையும் தந்துள்ளது.
ஆனால், நிரந்தரமாக விலகுவதாக அவர் அறிவிக்காததால் அவரது அறிவிப்பின் பின்னணியில் தேர்தலுக்கு பிறகு வேறொரு ராஜதந்திரம் இருப்பதாகவும் அமமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக போட்டியிடும் குறிப்பிட்ட 80 தொகுதிகளில் அக்கட்சியைத் தோற்கடிக்க அமமுக தேர்தல் வியூகம் அமைத்து வருகிறது. அதிமுகவில் வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியான பிறகு ‘சீட்’ கிடைக்காத முக்கிய நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் எம்எல்ஏ-க்கள், அமமுகவுக்கு ஆதரவாகவும், அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராகவும் உள்ளடி வேலை பார்க்க வாய்ப்புள்ளது.
அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த அமமுகவினர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 10ம் தேதி அமமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது. அன்றே தேர்தல் பிரச்சாரத்தையும் அவர்கள் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், சசிகலா நேரடியாக அமமுகவுக்கு ஆதரவு தெரிவிக்காததாலும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் கூறியிருப்பதால் 'இனி அமமுக பேனர்களில் சசிகலா படம் இடம் பெறுமா? விளம்பரங்களில் சசிகலா முன்னிலைப் படுத்தப்படுவாரா?,' என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அமமுகவினரிடம் கேட்டபோது, ‘‘சசிகலா ஆதரவு அமமுகவுக்கு நிச்சயமாக உண்டு. பிரச்சாரத்தில் தற்காலிகமாக சசிகலா முன்னிலைப்படுத்தப்படாவிட்டாலும் கண்டிப்பாக சசிகலா புகைப்படம் இடம்பெறும், ’’ என்றார்.