வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லாவிடில் எங்களின் ஆட்களும் உரிய பதிலடியைத் தருவார்கள் என்று தேமுதிகவினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ்,'' இன்றைக்கு எங்களுக்கு தீபாவளி. 234 தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிமுகவில் பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக கே.பி.முனுசாமி இருக்கிறார். அவர் அதிமுகவுக்குச் செயல்படவில்லை'' என்று தெரிவித்திருந்தார்.
அதேபோல விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், ''இந்த முடிவால் அதிமுக தொண்டர்களுக்குத்தான் வருத்தம் இருக்கும். எங்கள் தலைமை சரியில்லையென்று நீங்கள் சொல்லாதீர்கள். உங்கள் தலைமை சரியில்லை. எடப்பாடி பழனிசாமி தன்னை எம்ஜிஆராகவோ, ஜெயலலிதாவாகவோ நினைத்துக் கொண்டிருக்கிறார்'' என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
''தேமுதிக நன்றி மறந்துவிட்டுப் பேசக்கூடாது. 2021-ல் அதிமுக ஆட்சிதான் என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும், கோபத்தின் உச்சகட்டமாக இவ்வாறு செய்திருக்கின்றனர். ஒவ்வொரு அரசியல்வாதியும் ஆத்திரத்தில் பேசக்கூடாது. பக்குவப்பட்ட அரசியல்வாதிகள் பக்குவமான வார்த்தைகளைச் சொல்வார்கள்.
கூட்டணியில் இருந்து விலகியதாக தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. எடப்பாடி உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக தோற்கும் என்கிறார்கள். எப்போது இவர்கள் ஜோதிடர்கள் ஆனார்கள்? 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும். வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இல்லாவிடில் எங்களின் ஆட்களும் உரிய பதிலடியைத் தருவார்கள்.
கூட்டணி பிடிக்கவில்லை என்று அதிமுக மீது சேற்றை வாரி இறைக்கக் கூடாது. கூட்டணியில் பரஸ்பர உடன்பாடு முக்கியம். கட்சிகளின் செல்வாக்கு, அவர்கள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தொகுதிகளை வழங்குகிறோம். அவர்களுடைய பலத்துக்கு ஏற்ற வகையில்தான் தொகுதி கிடைக்கும். அதை ஏற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். இல்லாவிட்டால் அவர்களுக்குத்தான் கஷ்டம்.
பக்குவப்பட்ட அரசியல்வாதியாக இருந்தால் அமைதியாக விலகுவார்கள். அவர்கள் எங்களை விமர்சனம் செய்வது வெறுப்புத் தன்மையைத்தான் காட்டுகிறது. விஜய பிரபாகரனின் கருத்து கண்டிக்கத்தக்கது. அதை நாங்கள் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.
கூட்டணியில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் கூட்டணியில் இருந்து முறையாக விலக வேண்டும். நான் எவ்வளவு மரியாதையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? எங்கிருந்தாலும் வாழ்க என்று. அதுதான் ஓர் அரசியல்வாதிக்கு அழகு. அதைவிட்டுவிட்டு உடனே ஸ்லீப்பர் செல் என்ற கருத்து எதற்கு? இது தேவையில்லாத விஷயம்''.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.