தமிழகம்

அரசியல் முதிர்ச்சி இல்லாத, நன்றி மறந்த கட்சியா தேமுதிக? அதிமுகவின் பலம் குறையுமா?- அமைச்சர் ஜெயக்குமார் பதில்

செய்திப்பிரிவு

தேமுதிக தங்கள் கூட்டணியில் இருந்து விலகியதால், அதிமுகவின் பலம் குறையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தேமுதிக- அதிமுக இடையே நடந்த மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காத நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து, தேமுதிக விலகியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

தேமுதிக கூட்டணியில் இருந்து விலகியதால் அதிமுகவின் பலம் குறையுமா? என்ன பாதிப்பு ஏற்படும்?

எந்த பாதிப்பும் ஏற்படாது. தேமுதிகவுக்குத்தான் பாதிப்பே. தேமுதிக சட்டப்பேரவைக்குள் நுழைந்ததே ஜெயலலிதாவால்தான். அரசியலில் அங்கீகாரம் கொடுத்ததே அதிமுகதான். அதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த நன்றி இல்லாமல் பேசுவதன் பாதிப்பு நிச்சயம் அவர்களுக்கு இருக்கும்.

மீண்டும் தேமுதிகவுக்காக அதிமுகவின் கதவுகள் திறக்குமா?

அவர்கள்தான் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டி, பேசி, குட்பை சொல்லிவிட்டுப் போனார்கள். அவர்கள் எதிர்காலத்தில் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே எங்களின் நகர்வுகள் இருக்கும்.

பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கியது போல எங்களுக்கும் 23 தொகுதிகள் வேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கை ஏற்கப்படாததால்தான் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதா?

அதிமுக இன்றோ, நேற்றோ தொடங்கப்பட்ட கட்சி அல்ல. 1972 முதல் எத்தனையோ தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். எங்களுக்குப் பல அனுபவங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளின் பலத்தைப் பொறுத்துத்தான் நாங்கள் தொகுதிகளை ஒதுக்குகிறோம். அதன் அடிப்படையில்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இடம் வழங்கப்பட்டது. அந்தக் கட்சிக்கு இவ்வளவு கொடுத்ததால் எங்களுக்கும் இவ்வளவு வேண்டும் என்று கேட்க எந்தக் கட்சிக்கும் தார்மிக உரிமை கிடையாது.

அரசியல் முதிர்ச்சி இல்லாத, நன்றி மறந்த கட்சியா தேமுதிக?

நாங்கள், 'பிரிந்தவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க' என்று முதிர்ச்சியுடன் சொல்கிறோம். அவர்களை விமர்சிக்க விரும்பவில்லை. அதே நேரத்தில், எங்களை விமர்சித்தால் அதற்கு உரிய பதிலடியை, விமர்சனம் செய்யும் நிலையை ஏற்படுத்திவிடாதீர்கள். அதுதான் எங்களின் வேண்டுகோள்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT