தனியார் பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை | படங்கள்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

தனியார் பேருந்தில் மக்களோடு மக்களாகப் பயணம் செய்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை: குறைகளையும் கேட்டறிந்தார்

அ.முன்னடியான்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தனியார் பேருந்துகளில் மக்களோடு மக்களாகப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், இன்று (மார்ச் 9) அந்தோணியார் கோயில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, பாகூர் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் ஏறினார். அதில் மக்களோடு மக்களாகப் பயணம் செய்த அவர், போக்குவரத்து வசதியையும், சாலையின் நேர்த்தியையும் பார்வையிட்டார்.

அவர் சென்ற பேருந்து நடத்துநரிடம் தவளகுப்பம் வரை செல்லப் பணம் கொடுத்து பயணச்சீட்டு எடுத்தார். மேலும், அவருடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்களும் தங்களது சொந்தப் பணத்திலேயே டிக்கெட் எடுத்தனர்.

தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்து பயணிகளிடம் சகஜமாகப் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அப்போது, சில பயணிகள் முதியோர் உதவித்தொகை குறித்த நேரத்தில் கிடைக்கவில்லை, இலவச மனைப் பட்டா உள்ளிட்டவற்றை வழங்கவில்லை எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதற்கு ஆளுநர், ''கோரிக்கைகளை ஆளுநர் மாளிகை வந்து மனுவாகக் கொடுங்கள். தேர்தல் முடிந்தவுடன் இவை அனைத்தும் சரி செய்யப்படும். இப்போது அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அதற்கான திட்டங்கள் தயார் செய்யப்படும்'' என்றார்.

தொடர்ந்து பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் நடவடிக்கை பற்றியும் தமிழிசை விசாரித்தார். பயணத்தின்போது பொதுமக்கள் ஆளுநருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். சிலர் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டனர்.

பின்னர் தவளகுப்பம் 4 முனைச் சந்திப்பில் இறங்கிய அவரை, பாஜக கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கிருந்த நல்லவாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், ''சுருக்குவலை பயன்படுத்தத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தளர்த்த வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்து மனு ஒன்றை ஆளுநரிடம் அளித்தனர். பின்னர் அவர்களிடம் சிறிது நேரம் தமிழிசை பேசினார்.

பிறகு அங்கிருந்த பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஹேமாமாலினி, ஓபிசி அணி மாவட்டப் பொதுச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் தவளகுப்பத்தில் இருந்து மடுகரை செல்லும் சாலை பழுதடைந்து, மோசமான நிலையில் இருப்பதாகவும், அபிஷேகப்பாக்கம் பகுதியில் உள்ள மயானம் பராமரிப்பின்றி இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

அதனைக் கேட்டறிந்த ஆளுநர் தமிழிசை, அபிஷேகப்பாக்கம் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்யத் திட்டமிட்டார். இதற்காக, முன்னதாகவே புதுச்சேரி செல்வதற்காகப் பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தைத் திருப்பச் சொல்லி, அதில் ஏறி அபிஷேகப்பாக்கத்துக்குச் சென்றார். அப்போது பேருந்துப் பயணிகளிடம் சிறிய ஆய்வு இருப்பதாகக் கூறி, காலதாமதத்துக்கு மன்னிப்பு கோரினார். பிறகு அபிஷேகப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய அவர் அங்கிருந்து தனது காரில் மயானப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் மயானம் செல்லும் சாலையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.

பின்னர் காரிலேயே வந்து அபிஷேகப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அதே பேருந்தில் ஏறிக் கொண்டு புதுச்சேரி நோக்கிச் சென்றார். மரப்பாலம் வரை சென்ற அவர், அங்கிருந்து இறங்கி காரில் ராஜ் நிவாஸ் வந்தடைந்தார்.

SCROLL FOR NEXT