தமிழகம்

மீனவர்களுக்கு வழங்கிய இடத்தை அபகரித்ததாக அதிமுக எம்எல்ஏ-க்கு எதிராக வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

மீனவர்களுக்கு வழங்கிய இடத்தை அபகரித்ததாக அதிமுக எம்எல்ஏவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 8 வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த பூங்குழலி உட்பட 6 பேர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஏற்பட்ட கடல் அரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டோம். கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட 11 கிராம மீனவ மக்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தாலுகா சடையான்குப்பம் ஊராட்சியில் தலா 2 சென்ட் வீதம் வீட்டு மனை இலவசமாக வழங்கப்பட்டது. 30 ஏக்கர் நிலப்பரப்பில் 1,288 பேருக்கு மனை ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில் 2002-ல் வீடு கட்டுமானத்தைத் தொடங்கினோம்.

அதிமுக பிரமுகரான குப்பன் (தற்போது அதிமுக எம்எல்ஏ), அப்போதைய திமுக அமைச்சருடன் சேர்ந்து சதி செய்து அவரது ஆட்கள் மூலம் குடிசைகளை அகற்றி வலுக்கட்டாயமாக எங்களை வெளியேற்றினர். என்னைப் போன்ற ஒதுக்கீடுதாரர்களை அச்சுறுத்தி, அவரது பினாமி நபர்களுக்கு இடத்தை மாற்றிக் கொண்டனர்.

இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசியல் மற்றும் ஆள் பலத்தால் என்னைப் போன்ற ஏழை மீனவர்களின் நிலத்தை அபகரித்துவிட்டனர். தற்போது அந்த இடத்தில் 3 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றை அங்கிருந்து அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்து, 8 வாரத்தில் பதில் அளிக்கும்படி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT