தமிழகம்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்: நீதித்துறை இணை செயலருக்கு திமுக கடிதம்

செய்திப்பிரிவு

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய இணை நீதித்துறை இணை செயலருக்கு திமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பொதுமக்களிடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது. அதன் பேரில், நீதித்துறை இணை செயலர் பிரவீன் கார்குக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுக சார்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

சமூக நீதி கொள்கை என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியமான அம்சமாகும். சமூக நீதியை அடைவதற்காகவும், அதனை செயல்படுத்துவதறகாகவும் திமுக உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியாவில் நீதிபதிகள் நியமனத்துக்காக பின்பற்றப்பட்டு வருகிற நீதிபதிகள் தேர்வு முறையின் (கொலிஜியம் முறை) செயல்பாட்டுக்காக எந்தவொரு வழிமுறைகளும் இல்லை. தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளை நியமிக்கும் போது என்னென்ன அடிப்படையில் அவர்கள் நீதிபதிகளை தேர்வு செய்கிறார்கள் என்பது தெரியாது. இதில் வெளிப்படைத்தன்மை ஏதும் இல்லை.

நீதிபதிகள் நியமனத்தில் மக்களின் ஏக பிரதிநிதியான அரசாங்கத்தின் பார்வைகளை நீதிபதிகள் தேர்வுக்குழு நிராகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொலிஜியம் முறையிலான நீதிபதிகள் நியமன முறையில் புதிய திருத்தங்கள் மற்றும் மறு ஆய்வு அவசியமாகிறது. ஒருவரை நீதிபதியாக நியமிக்கும் போது அவர் அதற்கு எப்படி தகுதியானவராகிறார், எதன் அடிப்படையில் அவர் நியமிக்கப்படுகிறார் என்று அறிவது அவசியமானது.

எனவே, நீதிபதிகள் தேர்வுக்குழு முறைப்படியான நியமனத்தில் எந்த அளவுகோலின்படி ஒருவர் நீதிபதி ஆக்கப்படுகிறார் என்ற கேள்வி எழுகிறது. நீதித்துறையின் உயர் பதவிகளை வகிப்பவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தார் மட்டுமன்றி சமூகத்தின் அனைத்து தரப்பிலிருந்தும் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். அப்படி குறிப்பிட்ட சிலர் மட்டுமே நீதிபதிகள் ஆனால், அது நீதித்துறை மீதான நம்பிக்கையை பாழாக்கிவிடும்.

எனவே, நீதிபதிகள் தேர்வு முறையில் சாதி, மதம், மொழி உள்ளிட்ட வேறுபாடுகளை கலைந்து சமூகத்தின் அனைத்து தரப்பிலும் உள்ள தகுதியான வழக்கறிஞர்களை நீதிபதியாக்கிட வேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். மேலும், நீதிபதிகள் மீது எழுகிற ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்துவதும் அவசியமாகும். இதற்காக தனியான அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT