தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டுராபி பருவத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள்அறுவடைக்கு தயாராக இருந்தபோது, ஜனவரி மாதம் பெய்த தொடர் மழையால்கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
வேளாண், வருவாய் மற்றும் பேரிடர்மேலாண்மைத் துறைகளைச் சேர்ந்தஅதிகாரிகள் பயிர் பாதிப்புகளை ஆய்வுசெய்தனர். தூத்துக்குடி மட்டுமின்றிதமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில்மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, மானாவாரி நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.4 ஆயிரமும், வாழை, தென்னை,கரும்பு, எலுமிச்சை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களுக்கு ரூ.7,500-ம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து பாதிப்புக்கு ஏற்ப கடந்த 13-ம் தேதி முதல் 3 கட்டங்களாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டது. 40 சதவீத விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணத் தொகை வந்துள்ளது. 60 சதவீத விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்கப்பெறவில்லை.
இதற்கிடையே, தமிழகத்துக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நிவாரணத் தொகை வரவு வைப்பது நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து புதூர், வடமலாபுரம், மேலக்கரந்தை, ரெகுராமபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மானாவாரி விவசாயிகள், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து பேனர்கள் கட்டியுள்ளனர்.
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள்சங்க தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்த, ஒரு மாதத்துக்கு பின்னரே தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 13, 17, 21-ம் தேதிகளில் சுமார்40 சதவீத விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட ஒரு திட்டத்தை எவ்வாறுதேர்தல் நடத்தை விதியின் கீழ் நிறுத்த முடியும்? எனவே, நிவாரணத்தொகை வழங்குவதற்கான தடையை உடனடியாக நீக்கவேண்டும். இல்லையென்றால் ஏப்.6-ம்தேதி நடைபெற உள்ள தேர்தலை நிவாரணம் பெறாத விவசாயிகள் புறக்கணிப் போம், என்றார்.