திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள், கூரியர் மற்றும் பார்சல், அஞ்சல் துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் பேசும் ஆட்சியர் சிவன் அருள். அருகில், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன் உள்ளிட்டோர். 
தமிழகம்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொலை தொடர்பு நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டும்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு

செய்திப்பிரிவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை தொலை தொடர்பு நிறுவனங்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கைபேசி நெட்வொர்க் நிறுவனங்கள், கூரியர் நிறுவனங்கள், பார்சல் சர்வீஸ் மற்றும் அஞ்சல் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கூரியர் நிறுவனங்கள், அஞ்சல் துறை மற்றும் பார்சல் சர்வீஸ் மூலம் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், கூப்பன், பிரச்சார துண்டுப் பிரசுரங்களை வேட்பாளர்கள் பார்சல் வழியாக வாக்காளர்களின் வீடுகளுக்கு விநியோகம் செய்ய சாத்தியக்கூறுகள் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்கவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கூரியர் நிறுவனங்கள், பார்சல் சர்வீஸ் மற்றும் அஞ்சல் துறையினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் கடிதம், பார்சல் பொருட்கள் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். பார்சல் எங்கிருந்து வந்தது, எங்கு அனுப் பப்படுகிறது என்பதை கூரியர் நிறுவனங்களும், பார்சல் சர்வீஸ் நிறுவனங்களும் தவறாமல் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

அதேபோல, அஞ்சல் துறையினர் தபால் வாக்குகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றி கையாள வேண்டும். மாவட்ட தேர்தல் பிரிவுடன் அஞ்சல் துறை இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும்.

பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், மலைப்பகுதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் தொலைபேசி இணைப் புக்கான வசதிகளை தொலை தொடர்பு நிறுவனங்கள் இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிக்னல் சரியாக கிடைக்காத இடங்களை தொலை தொடர்பு நிறுவனங்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தற்போதே ஆய்வு செய்து, அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் உத்தரவுப் படி அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி யாராவது செயல்படுவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வில்சன்ராஜசேகர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மோகனகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT