பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் என்று அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதையடுத்து, தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இது தொடர்பாக திருச்சி சிவா எம்.பி. இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, '' 2014-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்து இறங்கும்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 108 அமெரிக்க டாலராக இருந்தது. அன்றைக்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.71.51 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.57.28 ஆகவும் இருந்தது.
ஆனால், இன்று 2021 பிப்ரவரி மாத நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 54.41 அமெரிக்க டாலர்கள்தான். அதாவது கிட்டத்தட்ட சரிபாதி விலை குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன் பெற மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை விலை உயர்த்தியதற்காகப் பெரும் போராட்டம் நடத்திய பாஜக, தற்போது தொடர்ச்சியாக விலையை உயர்த்தி வருகிறது. நாளை மீண்டும் அவை கூடும்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும்'' என்று திருச்சி சிவா தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கிய நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ''பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. கரோனா பேரிடர் பிரச்சினையால் கடந்த ஓராண்டாக நாட்டின் வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க முடியாத சூழ்நிலை உள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டின் வளர்ச்சிக்குத்தான் பயன்படுத்தப்படுகிறது'' என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.