தமிழகம்

போராட்டம் நடைபெறுவதைத் தடுக்க துணைமுதல்வரின் தேனி இல்லத் தெருக்களில் இரும்புத்தடுப்புகள் வைத்து அடைப்பு

என்.கணேஷ்ராஜ்

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டு முன்பு போராட்டம் நடைபெறுவதைத் தடுக்க அத்தெருப்பகுதியில் இரும்புத் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் அதிகளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் கள்ளிப்பட்டி அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இங்கு பெரும்பாலும் நிர்வாகிகள் சந்திப்பு, கட்சிக்கூட்டம் போன்றவை நடைபெறும்.

இதற்காக அவ்வப்போது இங்கு அவர் வந்து செல்வார். மேலும் இவருக்குச் சொந்தமான வீடுகள் பெரியகுளம் தெற்கு மற்றும் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ளது. இங்கு மிக முக்கிய நபர்களை மட்டும் சந்திப்பது வழக்கம்.

இவர் உள்ளூரில் இருந்தால் பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் இந்த வீட்டிற்கு வந்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பது வழக்கம்.

இந்நிலையில் கம்பம், பெரியகுளம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதியில் அதிமுகவிற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகிறது.

கருப்புக்கொடி கட்டுதல், கட்சிக்கு எதிரான பிரசாரங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றை சீர்மரபினர் மற்றும் வேளாளர் சமுதாயத்தினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இவர்கள் துணை முதல்வர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

எனவே பெரியகுளத்தில் உள்ள இவரது வீட்டின் தெருப்பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்குள்ள தெரு மற்றும் குறுக்குச்சந்துக்களில் இரும்புத்தடுப்புகள் வைத்து பாதை மறிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள், பொதுமக்கள்அருகில் உள்ள தெருவழியே செல்லுமாறு போலீஸார் தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் வீட்டு தெருப்பகுதியை திடீரென்று மறித்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT