தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் புகார் அளிக்க வசதியாக 2 எண்கள் அளிக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் பிபிஇ கிட் அளிக்கப்படும் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்துள்ளோம். தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்கிற எண்ணிலும் 24 மணி நேரமும் அளிக்கலாம். இது தவிர இலவச தொடர்பு எண் (180042 521950) அளித்துள்ளோம். இதில் 25 நபர்கள் எந்நேரமும் 24*7 நேரம் வேலை செய்வார்கள்.
அவர்களிடம் அளிக்கப்படும் புகார் பிரித்து மாவட்ட வாரியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பப்படும். ஆகவே, தேர்தல் குறித்து எந்தவிதமான புகார் இருந்தாலும் வாக்காளர்கள் இலவச எண்ணான மேற்குறிப்பிட்ட எண்ணில் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில் ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வாக்காளர் அடையாள அட்டை தவிர 11 வகையான ஆவணங்களை வாக்களிக்க அடையாள அட்டைகளாகப் பயன்படுத்தலாம்.
ஆதார் கார்டு, என்.ஆர்.ஐ. ஜாப் கார்டு, தபால் நிலையம் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் ஸ்மார்ட் கார்டு, பான் கார்டு, ஆர்பிஐ ஸ்மார்ட் கார்டு, இந்தியன் பாஸ்போர்ட், பென்ஷன் டாக்குமென்ட் போட்டோவுடன் கூடியது, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் அடையாள அட்டை ஆகியவை 11 வகையான ஆவணங்கள் ஆகும்.
இந்த முறை கரோனா தொற்றை முன்னிட்டு வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு இவிஎம் இயந்திரத்தைக் கையாளும்போது கோவிட் தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும்.
வாக்களிக்க வரும் வாக்காளர்களின் உடல் வெப்பம் கணக்கெடுக்கப்படும். அவர்கள் வெப்பம் அதிகமாக இருந்தால் சான்றிதழ் வழங்கப்படும். அவர்கள் கடைசி ஒரு மணி நேரம் இருக்கும்போது வாக்களிக்கலாம்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிபிஇ கிட் அளிக்கப்படும். வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்புமனுத் தாக்கல் கிடையாது. 50% வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமரா வசதியுடன் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் 4.97 லட்சம் பேர் ஈடுபடுத்தப்படுவர். 88,937 வாக்குச்சாவடிகள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படுகின்றன. தேர்தல் முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக 76 அரங்குகளில் வைக்கப்பட்டு எண்ணப்படும்”.
இவ்வாறு சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.