தேர்தல் களத்தை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தமிழகத்தில் நிச்சயமாக மீண்டும் ஒரு பெண் முதல்வராவார் என்றும் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி சமத்துவ மக்கள் கட்சியின் மாநில முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார், இந்து தமிழ் இணையதளத்துக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டி.
1. திரைப் பயணத்திலிருந்து திடீரென தீவிர அரசியல் பயணம். காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?
நான் திடீரென அரசியலுக்கு வந்துவிட்டதாகக் கருதவில்லை. 1989-ல் திமுக சார்பில் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அப்போது என்னுடைய பிரச்சாரம் திமுகவுக்குப் பக்கபலமாக இருந்திருக்கிறது. அதன்பின்னர், கலைத்துறை, அரசியல் துறை இரண்டையும் ஒருசேரச் சமாளிக்க இயலவில்லை. ஆகையால், தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. ஆனால், எப்போது என்னால் அரசியலுக்கு என்று தனியாக நேரம் செலவழிக்க முடிகிறதோ அப்போது தீவிரமாக ஈடுபடுவேன் எனச் சொல்லியிருந்தேன். தொலைக்காட்சி நெடுந்தொடரிலிருந்து விலகியதால் இப்போது தீவிர அரசியலுக்கான நேரம் கிடைத்துள்ளது.
2. எம்.ஜி.ஆர் வளர்த்துவிட்ட ஜெயலலிதா, கருணாநிதியின் மகள் என்பதால் கனிமொழி, விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததால் தன்னையும் இணைத்துக் கொண்ட பிரேமலதா, இப்போது சரத்குமார் நிழலில் தாங்கள்.. இப்படி தமிழகத்தில் பெரும்பாலும் அரசியலுக்கு வரும் பெண்கள் ஆண்களின் அடிச்சுவடைப் பின்பற்றி வருவதாகவே இருக்கிறதே. இதைப் பற்றி தங்களின் நிலைப்பாடு என்ன?
பொதுவாக இத்தகைய கேள்விகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. இருப்பினும் சொல்கிறேன். ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகவும் தனித்துவம் வாய்ந்த பெண்மணி. அவர் எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டாரே தவிர தனித்துவத்தை இழந்ததில்லை. அதேபோல், கனிமொழி ஒரு கவிஞர், பத்திரிகையாளர். அவருடைய தந்தை அரசியலில் இருந்ததால் அவருடைய உதவியுடன் தனது தனித்துவத்தை இன்றும் நிலைநாட்டிக் கொண்டிருக்கிரார். அதேபோல் தான் நானும். எனக்கென ஓர் அடையாளம் இருக்கிறது. அரசியல் களத்தில் என் கணவருக்கு நானும், எனக்கு அவரும் பக்கபலமாக இருக்கிறோமே தவிர நான் அவருடைய அடிச்சுவடைப் பின்பற்றி வரவில்லை. எனக்குள் அரசியல் வேட்கை எப்போதுமே இருந்துள்ளது. யாரும் ஒரே இரவில் அரசியல்வாதியாகிவிட முடியாது. நானும் அப்படி வரவில்லை.
3. அரசியலைப் பொறுத்தவரை தமிழகம் என்றால் திராவிடக் கொள்கை. திராவிடம் என்றால் சமூக நீதி, சமத்துவம்... இப்படி இருக்க தமிழக அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் இருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களா?
1967-ல் தமிழக அரசியல் பெரிய மாற்றத்தை எதிர்கொண்டது. திராவிடம் நிச்சயமாகத் தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், காலப்போக்கில் இந்தப் பயணம் மாறிவிட்டது. அதனாலேயே இந்தத் தேர்தலில் புதிய முயற்சியை எடுத்திருக்கிறோம். இந்தக் கூட்டணி நிச்சயமாக ஒரு மாற்றத்தைத் தரும். சமூக நீதி, சமத்துவம், பெண்கள் பிரதிநிதித்துவம் எல்லாம் வெறும் பேச்சாக இல்லாமல் அதனைச் செயல்படுத்துவோம்.
4. முதல் தேர்தல் உங்களுக்கு வெற்றி மாலை தந்தால் சட்டப்பேரவையில் உங்களின் முதல் குரல் என்னவாக இருக்கும்?
இப்போது என் கவனமெல்லாம் தேர்தல் போட்டி குறித்தே இருக்கிறது. சமூகத்திற்கு நிறைய நல்ல விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே உண்டு. முதலில் போட்டி, பின்னர் வெற்றி, அதன் பின்னர் எண்ணங்கள் செயல்படுத்தப்படும்.
5. அரசியல் களம் கண்டவுடனேயே தேர்தல் களம், சவாலாக இருக்குமென்று நினைக்கிறீர்களா? சமாளிக்க என்ன வியூகம் வைத்துள்ளீர்கள்?
அரசியல், தேர்தல் என்றாலே சவால் தான். சவால் இருக்கும் என்று தெரிந்துதானே களம் இறங்குகிறேன். சவாலைச் சந்தித்து எதிர்நீச்சல் போடுவதுதான் வாழ்க்கைத் தத்துவம். நான் தேர்தல் களத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஏற்கெனவே சொன்னதுபோல் 1989 முதலே அரசியலில் ஈடுபாடு இருந்திருக்கிறது. திமுகவுக்காக பிரச்சாரம், பின்னர் கடந்த தேர்தல்களில் என் கணவருக்காக பிரச்சாரம் என மேடைகளைச் சந்தித்திருக்கிறேன். அவை எனக்கு இப்போது பலமாக இருக்கும்.
6. தமிழகத்தில் மீண்டும் ஒரு பெண் முதல்வராக முடியும் என நீங்கள் நம்புகிறீர்களா?
ஏன் முடியாது. தமிழ்நாட்டில் நிச்சயமாக மீண்டும் ஒரு பெண் முதல்வர் வருவார். நம்பினால் நிச்சயம் நடக்கும்.
7. நீங்கள் திரைப்பின்னணி கொண்டவர் என்பதால் அதன் நிமித்தமாக ஒரு கேள்வி. பொதுவாகவே மெகா சீரியல்களில் பெண்ணடித்தன்மை தலைவிரித்தாடுகிறது. தற்போது தங்கள் பார்வை அரசியல் பக்கம் திரும்பியுள்ளதால் ஒருவேளை தாங்கள் இனி தயாரிக்கும் சீரியல்களில் மாற்றத்தை எதிர்பார்க்கலாமா?
சமீபகாலமாக நான் தயாரித்த சீரியல்களில் பெண் அடிமைத்தனம் இருந்ததில்லை. ஆனாலும், சீரியல்களை தொலைக்காட்சி சேனல்களுக்காக செய்வதால் அதில் ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது. அது ஒரு கூட்டு முயற்சி. ஆனால், ஓடிடியில் வெப் சீரிஸ் போன்றவற்றை செய்யும்போது நிச்சயமாக புரட்சிகரமான கருத்துகளை முன்வைப்போம்.
8. இந்திரா காந்தி, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி தங்களைக் கவர்ந்த பெண் ஆளுமை யார்? என்ன காரணம்?
இவர்கள் மூவருமே என் மனம் கவர்ந்த தலைவர்கள். இந்திரா காந்தியின் ஆளுமையைப் பார்த்து இன்றளவும் வியக்கிறேன். அவர் எடுத்த முடிவுகள் அனைத்தையும் ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன். இந்திரா காந்தி என்றாலே எப்போது என் மனதில் ஒரு கடினமான மனுஷி என்றே தோன்றும். அதேபோல், ஜெயலலிதாவும் மிகவும் கடினமான நபர். அவர் வெளியில் இரும்பு மனுஷியாகத் தெரிந்திருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய அனுபவத்திலிருந்து சொல்கிறேன் அவருக்குள் மிகவும் மென்மையான பெண்ணும் இருந்தார். ஆனால், அவர் எப்போதுமே தனது சிறிய பலவீனத்தைக்கூட வெளியில் காட்டியதில்லை. அந்த விஷயத்தை நான் கற்றுக்கொண்டிருக்கிறேன். மம்தா பானர்ஜி மக்களுக்கான மனுஷி. அவருடைய திறமையைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
9. அரசியலில் எனக்கு இவர்தான் முன்னுதாரணம் என்று யாரைக் குறிப்பிடுவீர்கள். ஏன்?
எனக்கு திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவரைப் போன்ற மிக மூத்த அரசியல்வாதியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததால் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். அரசியலில் எம்ஜிஆரின் மக்கள் தொண்டைப் பார்த்து வியந்திருக்கிறேன். அதேபோல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனான நெடும் பயணமும் எனக்கு நிறைய அரசியல் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. இதுதவிர திராவிட சிந்தனை கொண்ட என் தந்தையுடன் சிறுவயதிலிருந்தே நான் பயணித்திருக்கிறேன். அவருடைய கொள்கைகளை நானும் பின்பற்றியிருக்கிறேன். இன்று, என் கணவரிடமிருந்து நிறைய பண்புகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். என் கணவருக்கு காமராஜர் முன்னுதாரணம். இப்படி ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு நற்பண்பைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆகையால் ஒரே ஒரு ஆளுமையை மட்டும் சுட்டிக்காட்ட முடியாது.
10. தூத்துக்குடி பொதுக்கூட்ட மேடையில் பேசிய நீங்கள்.. கோவில்பட்டியோ இல்லை வேளச்சேரியோ, அவர் சொல்லும் இடத்தில் போட்டியிடுவேன் என்றீர்கள். அப்படியென்றால் தங்களின் தனிப்பட்ட விருப்பமென்று எதுவும் இல்லையா?
இது அரசியல் களம், என் வீட்டுச் சமையலறை இல்லை. அங்கு நான் விரும்பியதைச் சமைக்கலாம். அரசியல் களத்தில் கட்சித் தொண்டர்கள், தலைவரின் கருத்துகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். இங்கு தனிப்பட்ட விருப்பம் என்பது ஏதுமில்லை.
இவ்வாறு ராதிகா சரத்குமார் கூறினார்.
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in