கடந்த 40 ஆண்டுகளாக வன்னிய இன மக்களுக்கு எந்த ஒரு சலுகையும் செய்யாமல் தனது குடும்பத்தின் நலனை மட்டும் கருத்தில்கொண்டு ராமதாஸ் செயல்படுகிறார் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி மகளிர் அணித் தலைவியும் வீரப்பன் மனைவியுமான முத்துலட்சுமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே ஏ.ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: வன்னியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளனர். ராமதாஸ் வேண்டுகோளை ஏற்று வழங்கியதாகக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. வன்னியர் கூட்டமைப்பு தொடுத்த வழக்கின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கியுள்ளனர். தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்ததும் வன்னியர்களுக்கு முழு இட ஒதுக்கீடு கிடைக்கும். 40 ஆண்டுகளாக வன்னிய இன மக்களுக்கு எந்த ஒரு சலுகையும் செய்யாமல் தனது குடும்பத்தின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு ராமதாஸ்செயல்படுகிறார். வன்னிய இளைஞர்கள் ராமதாஸ் பேச்சையோ, அன்புமணி பேச்சையோ கேட்டு ஏமாறக்கூடாது.
கல்வி ஒன்றால் மட்டுமே சமுதாயம்முன்னேற முடியும். தேர்தலுக்குப் பிறகு வன்னிய சமுதாய மக்களின் கேள்விகளுக்கு மருத்துவர் ராமதாஸ் பதில் சொல்லும் காலம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.