கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தில் 421.41 ஏக்கரில் பெருந்துறை தொழிற்பேட்டையின் விரிவாக்கம் அமைய உள்ளதாக தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழக (சிப்காட்) இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பால், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட சந்திராபுரம், கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், புளியமரத்துப்பாளையம், வாரப்பட்டி, பூசாரிப்பாளையம், சுல்தான்பேட்டை, கரடிவாவி, செலக்கரிசல் உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது:
சிப்காட் அமையவுள்ளதாக சொல்லப்படும் வாரப்பட்டி கிராமத்தை சுற்றியிலும் காலிஃபிளவர், மிளகாய், தக்காளி, கத்திரி, பாகற்காய், பப்பாளி என நூற்றுக்கனக்கான ஏக்கரில் காய்கறி சாகுபடியும், கறிக்கோழி வளர்ப்பு பண்ணைகளும் உள்ளன. கடந்த காலங்களில் மழைப்பொழிவு, பருவநிலை மாற்றம் காரணமாக விவசாயம் செய்ய முடியாத சூழலால், உப தொழிலான ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபட்டுவருகிறோம். சிப்காட் மூலம் தொடங்கப்படும் தொழிற்சாலைகளால் நீர், நிலம், காற்று மாசு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே பெருந்துறை, கடலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெரிந்துகொண்டுள்ளோம். எனவே, எங்களின் வாழ்வாதாரமான விவசாயம், கால்நடை வளர்ப்பு மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகலாம் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து ஊர்களில் பேனர்கள் வைத்துள்ளோம்” என்றனர்.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "சிப்காட் அமையப்போவதற்கான எந்தவித ஆரம்பக்கட்ட பணிகளும் தொடங்கப்படாத நிலையில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பொதுமக்களின் கருத்துக்கேட்பு இல்லாமல் எந்த திட்டமும் செயல்படுத்தப்படாது" என்றனர். இதற்கிடையே, கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை ஆராயவும், அதற்குத் தீர்வு காணும் திட்டத்தை வழங்கவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியவிஞ்ஞானி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி, கடலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.