தமிழகத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என ஓசூரில் பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
ஓசூரில் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள்ஆலோசனைக் கூட்டம நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கேரளாவிலும் பாஜக நல்ல முறையில் வளர்ச்சி பெற்று வருகிறது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசு அமையவுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் நாங்கள் போட்டியிடும் 20 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறுவோம். கடந்த கால காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசின் பல்வேறு முறைகேடுகள் காரணமாகவே பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர பெரும்பாலான மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் இதற்கு ஒரு நிரந்தர தீர்வை எதிர்காலத்தில் பாஜக அரசு நிச்சயமாக ஏற்படுத்தும். தமிழகத்தில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.