கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலை மீது நள்ளிரவில் தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிடர் கழகத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி-குப்பம் சாலையில் காட்டிநாயனப்பள்ளியில் சமத்துவ புரம் உள்ளது. இங்கு நுழைவு வாயிலில் பெரியார் சிலை உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு பின்னர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெரியார் சிலை மீது டயரை வைத்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பினர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற மகாராஜகடை போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், சிலை மீது படிந்திருந்த கரியை சுத்தம் செய்தனர். பின்னர் சிலைக்கு புதிதாக வண்ணம் பூசப்பட்டது.
இதற்கிடையில், தீ வைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று சமத்துவபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திராவிடர் கழகத்தினர் அப்பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்து மறியலை கைவிடச் செய்தனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் சிலைக்கு தீ வைத்து அவமரியாதை செய்தவர்களை கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.