சென்னையில் தேர்தல் பாதுகாப்பு, ரோந்து பணியில் துணை ராணுவப் படையினருடன் போலீஸார் இணைந்து செயல்பட வேண்டும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துறை முழு வீச்சில் செய்துவருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட 4,500 துணை ராணுவப் படையினர் தயாராகி வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தெரியப்படுத்தி, பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொடி அணிவகுப்பும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், துணை ராணுவப்படையினருடன் இணைந்து சென்னை போலீஸார் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, பூக்கடை, அம்பத்தூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களுக்கும் உரியஅறிவுறுத்தல்களை அவர் வழங்கியுள்ளார். சென்னையில் துணை ராணுவப் படையினர் விரைவில் கொடி அணிவகுப்பு நடத்த உள்ளனர்.