பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் முழுமையாக விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என இவ்வழக்கில் கைதாகியுள்ள அட்டாக் பாண்டி அரசுக்கு கடிதம் எழுதியதால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ். இவர் மதுரை டிவிஎஸ் நகரிலுள்ள தனது வீடு அருகே கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக திமுகவை சேர்ந்த வேளாண் விற்பனைக் குழு தலைவர் அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அட்டாக் பாண்டி கூறியதாலேயே இக்கொலையை செய்ததாக கைதானோர் தெரி வித்த தகவலின்பேரில் அவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகள் தலை மறைவாக இருந்த அட்டாக் பாண் டியை போலீஸார் கடந்த செப்டம் பரில் மும்பையில் கைது செய்த னர். இவரை போலீஸார் இரு முறை காவலில் எடுத்து மதுரையில் வைத்து விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.
ஏற்கெனவே கைதானோர் தெரிவித்த தகவலின் அடிப்படை யில், இதை ஏற்பதுபோல் அட்டாக் பாண்டியின் வாக்குமூலமும் இருந் துள்ளது. தற்போது பாளையங் கோட்டை சிறையில் அட்டாக் பாண்டி அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்வழக்கை திடீரென சிபிசிஐடிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு, சட்டம், ஒழுங்கு பிரச்சினை உட்பட சில முக்கியமான நேரங்களில் மட்டுமே சிபிசிஐடி விசாரணைக்கு வழக்குகள் மாற் றப்படும். குற்றப்பத்திரிகை தாக் கல் செய்யப்படும் நிலையை எட்டியுள்ள நிலையில் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு திடீரென சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதற்கு அட்டாக் பாண்டி எழுதிய கடிதமே காரணம் என தகவல் வெளியாகி யுள்ளது.
இது குறித்து போலீஸார் கூறியது: பாளையங்கோட்டை சிறையிலிருந்தபடியே அட்டாக் பாண்டி அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இவ்வழக்கில் பல விஷயங்களை போலீஸார் முழுமையாக விசாரிக்கவில்லை. அப்படி விசாரித்தால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என அதில் தெரிவித்துள்ளார். மதுரை காவல் ஆணையரும் மாற்ற ஒப்புதல் அளித்ததால், வழக்கு சிபிசிஐ டிக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை அதிகாரியாக மதுரை சிபிசிஐடி ஆய்வாளர்கள் கணேஷ்பாபு, சரவணன் ஆகியோ ரில் ஒருவரை நியமிக்க ஆலோசிக் கப்பட்டது. இந்நிலையில், ஏற் கெனவே இவ்வழக்கை விசாரித்து வரும் மதுரை சுப்பிரமணியபுரம் சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் கோட்டைச்சாமியை சிபிசிஐடிக்கு அயல்பணி முறையில் மாற்றம் செய்து, அவரே விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அட்டாக் பாண்டி கடிதம் குறித்து காவல்துறை உயர் அலுவலர்கள் சிபிசிஐடி போலீஸாருடன் 2 நாட் களாக ஆலோசித்து வருகின்றனர் என்றனர்.
அட்டாக் பாண்டியின் வழக்கறி ஞர் தாமோதரன் கூறுகையில், ‘அட்டாக் பாண்டி கடிதம் எழுதி யுள்ளார். இது குறித்து வரும் டிச. 1-ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்போது அட் டாக் பாண்டியிடமே கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்’ என்றார்.
‘நுணுக்கமாக விசாரிக்க வேண்டும்’
மதுரை காவல் ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் கூறியது: பொட்டு சுரேஷ் வழக்கில் விசாரணையை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். நுணுக்கமான சில விசாரணைகள் மட்டுமே பாக்கி உள்ளன. இந்த விசாரணையை மிகப் பொறுமையாக கையாள வேண்டியுள்ளது. காவல் ஆய்வாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், இவர்கள் மூலம் பொட்டு சுரேஷ் வழக்கு விசாரணைக்குப் பயன்படுத்தினால் வழக்கமான பணிகள் பாதிக்கப்படும். இதனால் பொட்டு சுரேஷ் கொலை வழக்கை சிபிசிஐடியை விசாரிக்கும்படி தெரிவித்ததால் மாற்றப்பட்டுள்ளது என்றார்.