தபாலில்தான் வாக்களிக்க வேண்டும் என்று அரசு அலுவலர்கள் நிர்பந்தம் செய்வதாக மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச் செயலர் நம்புராஜன் விருதுநகரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் 13.50 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். அவர்களில் சுமார் 11 லட்சம் மாற் றுத் திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். விருதுநகர் மாவட் டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கணக்கீட்டின்படி 33,289 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.
வரும் தேர்தலில் மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு தபால் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. நடமாட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இந்த வசதி பயன்படும். இதனால் எங்களது சங்கம் வரவேற்கிறது.
ஆனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் சில நாட்களாக அதிகாரிகள் மாற்றுத் திறனாளி களின் வீடுகளுக்குச் சென்று, தபால் வாக்களிக்க ஒப்புதல் அளிக்கும் படிவத்தை வழங்கி அதில் கையொப்பமிடுமாறு கட்டாயப்படுத்துவதாக மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கொண்டு வரும் தபால் வாக்குப் படிவத்தில் தெரிந்தோ, தெரியாமலோ ஒப்புதல் அளித்துவிட்டால், சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளி, முதியோர் வாக்காளர் வாக்குச் சாவடிக்குச் செல்லும் உரிமையை இழந்துவிடுவர். வாக்களிக்க ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய தனது கடமையை தட்டிக்கழிப்ப தோடு, மாற்றுத் திறனாளிகள் உரிமைகள், சட்ட விதிகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது.
இத்தகைய நடவடிக்கைகளை அதிகாரிகள் நிறுத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.