ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடுப்பது முறையல்ல. முதல்வர் என் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அவதூறு தகவல்களை வெளியிட்டதாகக் கூறி என் மீது முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார். வார இதழ் ஒன்றில் வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவை என்றால் அரசு தரப்பில் விளக்கமாக பதில் அளிக்கலாம். இதுவே ஜனநாயகத்தில் வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். முதல்வரை பற்றி எழுதியதும் அவதூறு வழக்கு தொடர்கிறார்கள்.
ஆனால், 30 அமைச்சர்களைப் பற்றி எழுதியதற்கு எந்த வழக்கும் தொடரவில்லை. அப்படியெனில் அதையெல்லாம் உண்மை என ஏற்றுக் கொள்கிறார்களா?
முதல்வருக்கு எதிராக கருத்து வெளியிட்டதாகக் கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு பத்திரிகை ஆசிரியர்கள் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பல வழக்குகளில் அவதூறு வழக்கு தொடர்வதற்கான காரணங்களே இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, 'முதல்வரை ஊழல்வாதி எனக் கூறுவது அவதூறு என்றால் எதையுமே எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியாதே' என தெரிவித்துள்ளார். இப்போது மட்டுமல்ல 1991 அதிமுக ஆட்சியின்போது 5 ஆண்டுகளில் 180 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கு தொடுப்பது முறையல்ல. முதல்வர் என் மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.