வரும் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரத்தில் வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் கரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு கையுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள புனித லசால் மேல்நிலைப்பள்ளி, காரபேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்திநகர் இந்து அரிசன தொடக்கப்பள்ளி, சண்முகபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் வாக் காளர்களுக்கு போதிய இடவசதி, மாற்றுத்திறனாளிகள், வயதான வர்கள் வருவதற்கான சாய்தள வசதி, காற்றோட்ட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி. செந்தில் ராஜ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டுஅனைத்து வாக்குச் சாவடி களிலும் ஆட்சியர் உள்ளிட்ட 104 மாவட்ட அளவிலான அலுவலர் களை கொண்டு ஆய்வு செய்யப் பட்டுள்ளது.
வாக்குச்சாவடிகளில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கு சாய்தள வசதி, மின்விளக்கு, மின்விசிறி வசதி, கரோனா கால கட்டமாக உள்ளதால் இரண்டு பக்கமும் காற்றோட்ட வசதி போன்றவை இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், அவை உடனடி யாக நிவர்த்தி செய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 494 வாக்குச் சாவடிகளையும் சேர்த்து தற்போது மொத்தம் 2,097 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் பதற்றம் மற்றும் மிக பதற்றமான வாக்குச்சாவடிகள் 247 உள்ளன.
வாக்குப்பதிவு நேரம் மாலை 6 மணிக்கு பதில் இரவு 7 மணி வரை ஒரு மணி நேரம் நீட்டிக்கபட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பதற்கு முன்னதாக வாக்காளர்களுக்கு கையுறைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குச்சாவடி மையத்துக்குள் வரும் வாக்காளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் வாக்குசாவடி அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி போடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆய்வின் போது தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின் மற்றும் துணை வட்டாட்சியர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.