திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் விதிகளின் அனுமதியில்லாமல் தேர்தல் தொடர்பான சுவரொட்டி, துண்டுப் பிரசுரங்களை அச்சடிக் கும் அச்சக உரிமையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப் படும் என ஆட்சியர் சிவன் அருள் எச்சரித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிகளை அச்சக உரிமையாளர்கள், பதிப்பகத்தார்கள் பின்பற்ற வேண்டிய விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மோகனசுந்தரம், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், தேர்தல் வட்டாட்சியர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, ‘‘தேர்தல் தொடர்பான எந்த தகவல்களை அச்சடிக்கும்போதும் தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அச்சக உரிமையாளர் மீது கிரிமினில் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், வாசகங்களை தெளிவாக ஆராய்ந்து அச்சடிக்க வேண்டும்.
தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களில் அச்சக உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் பதிப்பகத்தார் பெயர், முகவரி உள்ளிட்டவற்றையும் அச்சிட வேண்டும். அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களின் எண்ணிக்கை மற்றும் மொத்த செலவு ஆகியவற்றை சரியாக குறிப்பிட்டு அறிக்கை அளிக்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அறிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அறிக்கை அனுப்பாத அச்சக உரிமையாளர் மற்றும் பதிப்பகத்தார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அச்சடிக்கப்படும் துண்டுப் பிரசுரமானது சட்டத்துக்கு புறம்பானதாகவோ, மதம், இனம், மொழி, வகுப்பு மற்றும் ஜாதி ஆகிய விவரங்கள் தொடர்பான எதிர்ப்பு இருந்தாலோ அல்லது தனிமனித நடத்தை விவரங்கள் எதிர்ப்புடையதாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.