தமிழகம்

பாடகர் கோவனை ஆஜர்படுத்த கோரிய ஆட்கொணர்வு மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பாடகர் கோவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

மக்கள் கலை இலக்கிய கழகத் தின் கலைக்குழு பொறுப்பாளராக இருப்பவர் தெருக்கூத்து கலைஞர் சிவதாஸ் என்ற கோவன் (53). கோவன் இசையமைத்து பாடிய மதுவிலக்கு பிரசாரப் பாடல், சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்தப் பாடல், அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விடுவதாக கூறி மக்கள் கலை இலக்கிய கழகத் தலைவர் கண்ணையா ராமதாஸ், பாடகர் கோவன் ஆகியோர் மீது தேச துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கோவனை திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 30-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு போலீஸார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கண்ணை யாவை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கோவனின் நண்பர் வி.வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், ‘கோவனை சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கையில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, அவரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், பின்னர் அவரை விடுவிக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுதாகர், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘கோவன் மீது முறையாக வழக்கு பதிவு செய்து, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது கைது நடவடிக்கையில் எவ்வித விதிமீறலும் இல்லை. எனவே, மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தனர். கோவனுக்கு ஜாமீன் கோரி சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT