கும்பகோணம் சங்கர மடத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்த சாக்கோட்டை க.அன்பழகன். 
தமிழகம்

மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற காஞ்சி சங்கராச்சாரியாரிடம் வாழ்த்து பெற்ற கும்பகோணம் திமுக எம்எல்ஏ

வி.சுந்தர்ராஜ்

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏவாக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த சாக்கோட்டை க.அன்பழகன். இவர் கடந்த 2011, 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

பிராமணர்கள் அதிகம் நிறைந்த கும்பகோணம் தொகுதியில் கட்சி பேதமின்றி எல்லோரிடத்திலும், எளிதில் அணுகக்கூடியவராக இருந்து வருபவர். தற்போது நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனக்கு சீட்டு வழங்க வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளார்.

இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள காஞ்சி சங்கர மடத்தில் தங்கியிருந்து பூஜைகளைச் செய்து வரும் காஞ்சி சங்காரச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை இன்று காலை (7-ம் தேதி) சாக்கோட்டை க.அன்பழகன் சென்று சந்தித்தார்.

அப்போது தனது தொகுதிக்குபட்ட பெருமாண்டி ஊராட்சியில் சங்கர மடத்துக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் நேரு - காமராஜர் சாலைக்கு இணைப்பு வழங்க, மடத்துக்குச் சொந்தமான இடத்தைக் கொடுத்து உதவ வேண்டும் எனக் கேட்டு ஒரு கோரிக்கை மனுவையும், வஸ்திரம், பழங்கள் ஆகியவற்றை வழங்கியும், மூன்றாவது முறையும் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற எம்எல்ஏ, சுவாமியிடம் வாழ்த்து பெற்றார்.

மனுவை வாங்கி அதனைப் படித்துப் பார்த்துவிட்டு மடத்து நிர்வாகிகளிடம் சுவாமி கொடுத்தார். பின்னர் எம்எல்ஏ அன்பழகனுக்கு பழம், பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கினார்.

அப்போது சுவாமியிடம் "கரோனா நேரத்தில் வீட்டுக்கு வீடு அரிசி, மளிகைப் பொருட்களையும் எல்லோருக்கும் வழங்கினார். அதுவும் குறிப்பாக வைதீகர்களுக்கும் எல்லா உதவிகளையும் அந்த நேரத்தில் வழங்கினார்" எனச் சுற்றியிருந்தவர்கள் எடுத்துக் கூறினர். அப்போது சுவாமி, நல்ல பணி தொடரட்டும் என சிரித்தபடி ஆசி வழங்கினார் .

சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட அன்பழகன், கும்பகோணம் சங்கர மடத்துக்கு ஏற்கெனவே ஒரு முறை வாக்கு சேகரிக்கச் சென்றார். சங்காராச்சாரியாரை எம்எல்ஏ அன்பழகன் சந்தித்த வீடியோ தற்போது திமுகவினர் மத்தியிலும், சமூக வலைதளங்கில் பரவி வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT