காரைக்காலில் மாதிரி வாக்குச் சாவடியைத் திறந்து வைத்து, அதில் மின்னணு வாக்காளர் அட்டையைப் பதிவிறக்கம் செய்யும் முறை குறித்து வாக்காளர் அறிந்து கொள்வதைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா. 
தமிழகம்

காரைக்காலில் 25 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை: மாவட்ட ஆட்சியர் தகவல்

அ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்டத்தில் 25 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தெரிவித்துள்ளார்.

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தேர்தல் துறை மற்றும் ஸ்வீப் அமைப்பின் சார்பில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா இன்று (மார்ச் 7) திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்படும். எத்தனை மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் என்பது விரைவில் தெரிவிக்கப்படும். மாதிரி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறை, விவிபாட் இயந்திரத்தின் செயல்பாடு, செல்போனில் மின்னணு வாக்காளர் அட்டையை (இ-எபிக்) பதிவிறக்கம் செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

முதல் முறை இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்காளர் அட்டையை செல்போனில் பதிவிறக்கம் செய்து, வாக்குச் சாவடியில் அதனைக் காண்பித்து வாக்களிக்க முடியும். காரைக்கால் மாவட்டத்தில் 25 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.

மாதிரி வாக்குச்சாவடியில் தேர்தல் நாள் வரை பொதுமக்களுக்குச் செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது. வாக்காளர்கள் தங்கள் புகார்களை 1950 என்ற வாக்காளர் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டும், தேர்தல் தொடர்பான புகார்களை 89036 91950 வாட்ஸ் அப் எண் மூலமும் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் துணைத் தேர்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் எம்.ஆதர்ஷ், எஸ்.சுபாஷ், ஸ்வீப் அதிகாரி ஷெர்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT