தமிழகம்

மூன்றாவது அணி தமிழகத்தில் சாத்தியமில்லை; கமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது: ப.சிதம்பரம் பேச்சு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மூன்றாவது அணி எதையும் சாதித்ததாக வரலாறு இல்லை. இந்தத் தேர்தலிலும் அப்படி ஒரு சூழ்நிலை இல்லை. இது கமலுக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் தொடர்வதுதான் தமிழகத்துக்கு நல்லது என ப.சிதம்பரம் பேசினார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் ஏற்பட்ட தொகுதிப் பங்கீடு இழுபறியில், காங்கிரஸ் கட்சி குறித்து கமல் அக்கறையுடன் பேசினார். மக்கள் நீதி மய்யம் காங்கிரஸுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்தது.

காங்கிரஸுக்குள்ளேயே அதற்கு சில பேர் ஆதரவும் தெரிவித்தனர். ஆனால், ப.சிதம்பரம் இந்த விவகாரத்தை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது என அறிவுரை கூறும் வண்ணம் பேசினார். இது கூட்டணிப் பேச்சுவார்த்தை உடன்பாடு வருவதற்கு முன்னர் பேசிய பேச்சு ஆகும்.

காரைக்குடியில் நேற்று மாலை ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“இந்தத் தேர்தலினால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடப் போவதில்லை. ஆனால், காங்கிரஸ் அழிந்துவிடாமல் காப்பாற்றப்பட வேண்டுமானால் இந்தத் தேர்தல் வேண்டும். இந்தத் தேர்தலில் பாஜகவை நாம் தோற்கடிக்காவிட்டால் நம்முடைய இடத்தை பாஜக பெற்றுவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள். பாஜக வலுக்கவில்லை. ஓரளவு சோர்வு காட்டிவிட்டால் மற்ற கட்சிகள் தடுத்துவிடும்.

நாம் இந்த அணியில் இருந்தால்தான் பாஜகவை திமுக எதிர்க்கும். நாம் இந்த அணியில் இல்லாவிட்டால் அதிமுகவை மட்டும் திமுக எதிர்க்கும். பாஜக எதிர்ப்பை திமுக அடக்கித்தான் வாசிக்கும். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அகில இந்திய அளவில் முக்கியமான ஒன்று. காங்கிரஸின் தவறான உத்திகளால் கர்நாடகா பாஜகவின் கைக்குச் சென்றுவிட்டது.

தமிழகத்தில் 3-வது அணியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. தமிழகத்தில் 2 பெரிய கட்சிகள் திமுகவும், அதிமுகவும்தான். இந்த இரண்டு கட்சிகள் அமைக்கும் அணிகளுக்கு இடையேதான் போட்டி நடக்கும். மூன்றாவது அணி என்று வந்தால் அவர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று அடையாளம் காட்டிக்கொள்ளலாமே தவிர, அது தேர்தலைத் தீர்மானிக்கக்கூடிய அணியாக இருக்காது.

இது நண்பர் கமல்ஹாசனுக்கும் பொருந்தும். எல்லோருக்கும் இது பொருந்தும். தமிழகத்தில் இரண்டு பெரிய அணிகளுக்கிடையேதான் 1971-ல் இருந்து போட்டி இருந்து வந்துள்ளது. புதிதாக அந்த வரலாற்றை மாற்றி அமைக்கக்கூடிய சூழ்நிலை வந்ததாக எனக்குத் தெரியவில்லை”.

இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

SCROLL FOR NEXT