தமிழகம்

தென் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை: உயிரிழப்புகள் அதிகரிப்பதாக புகார்

செய்திப்பிரிவு

தென் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகரிப்பதாக மக்கள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து மக்கள் கண்காணிப்பக நிறுவனர் ஹென்றி டிபேன், சுகாதார உரிமை சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

தென் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 9 அரசு தலைமை மருத்துவமனைகள், 79 தாலுகா மருத்துவமனைகள், 6 குழந்தைகள் மற்றும் பெண்கள் நல மருத்துவமனை உட்பட மொத்தம் 94 அரசு மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இந்த மருத்துவ மனைகளில் 7,335 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 1,435 படுக்கைகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 454 படுக்கைகளும் உள்ளன.

இந்த மருத்துவமனைகளுக்கு 2013-ம் ஆண்டு 23 லட்சத்து 21 ஆயிரத்து 534 உள் நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துள்ளனர். 2014-ம் ஆண்டு 40 ஆயிரம் உள் நோயாளிகள் அதிகரித்து, தற்போது 23 லட்சத்து 61 ஆயிரத்து 941 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் நோயாளிகள் வருகைக்கு தகுந்தபடி மருத்துவர்கள் இல்லை.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 66 மருத்துவர்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 55 மருத்துவர்களும், விருதுநகரில் 40 மருத்துவர்களும், திருநெல்வேலியில் 40 மருத்துவர்களும், சிவகங்கையில் 27 மருத்துவர்களும், தூத்துக்குடியில் 21 மருத்துவர்களும், மதுரையில் 21 மருத்துவர்களும், தேனியில் 22 மருத்துவர்களும், கன்னியாகுமரியில் 8 மருத்துவர்கள் என மொத்தம் 300 மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 31 சதவீதம் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.

தென் மாவட்டங்களில் உள்ள 9 மாவட்ட தலைமை மருத்துவமனைகளை ஒப்பிடும்போது, ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிக பட்சமாக 26 மருத்துவர்களும், திண்டுக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் 22 மருத்துவர்களும், விருதுநகரில் 21 மருத்துவர்கள் உட்பட தென் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 118 மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.

குறிப்பாக, காரைக்குடி தலைமை மருத்துவமனையில் இரண்டே மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். ஏர்வாடியில் 2 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டும். தற்போது மருத்துவர்களே இல்லாமல், வெறும் செவிலியர்களைக் கொண்டு ஆரம்ப துணை சுகாதார நிலையம் போல செயல்படுகிறது. முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 14 மருத் துவர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால், இங்கு 4 மருத்துவர்களே பணிபுரிகின்றனர். கடலாடி அரசு மருத்துவமனையில் 4 மருத்து வர்கள் பணிபுரிய வேண்டும். தற்போது ஒரு மருத்துவர் கூட பணியாற்றவில்லை.

ஒரு மருத்துவர் நாள் ஒன்றுக்கு குறைந்தது 70 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது. ஆனால், ராமநாதபுரத்தில் பல அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 மருத்துவர்களைக் கொண்டு 500-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளுக்கும், 20-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர் பற்றாக்குறையால் தென் தமிழகத்தில் 94 அரசு மருத்துவமனைகளில் வெறும் 36 மருத்துவமனைகளில் மட்டுமே மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள அரசு மருத்துவமனைகளில், விபத்து காயம் தீவிர சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் முழு அளவிலான அனைத்து மருத்துவர்களுடன் செயல்படாத நிலை உள்ளது. அதனால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது எனத் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT