தமிழகம்

இணையவழி பட்டா மாறுதலுக்கான ஒப்புதலில் தவறு நடந்தால் நடவடிக்கை: சார்பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

இணையவழி பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கும்போது தவறு நடைபெற்றால் சார்பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் முன்பு, ஒரு இடத்தை மற்றொருவருக்கு கிரையம் செய்து கொடுக்கும்போது, அதற்கான பத்திரப்பதிவு முடிந்து, பத்திரம் கைக்கு கிடைக்கப்பெற்ற பிறகு, அதைக் கொண்டு வருவாய்த் துறையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதனால் ஏற்படும் காலதாமதம், குழப்பம் ஆகியவற்றை தவிர்க்க, சர்வேஎண் உட்பிரிவு செய்ய தேவை யில்லாத சொத்துகளுக்கான பட்டாமாறுதலுக்கு, சார்பதிவாளரே இணையதளம் வழியாக ஒப்புதல் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் கடந்த 3-ம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெறிமுறைகள் வெளியீடு

அசையா சொத்துகள் உரிமை மாற்றம் செய்யப்படுவதற்கான பத்திரப்பதிவின்போது, சர்வே எண் உட்பிரிவு செய்ய தேவையில்லாத சொத்துகளுக்கு, பத்திரப்பதிவு முடிந்த நிலையிலேயே இணையதள வழி பட்டா மாற்றத்துக்கு சார்பதிவாளரால் கணினி வழியாக ஒப்புதல் வழங்கப்படுகிறது.

இதில் அசையா சொத்தை எழுதிக்கொடுத்தவரின் பெயரையும், ஏற்கெனவே வழங்கப்பட்ட இணைய வழி பட்டாவில் உள்ள நில உரிமையாளர் பெயரையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் ஒப்புதல்வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நடைமுறை தொடர்பாக நிலஅளவை ஆணையர் கடிதம் ஒன்றைஎழுதியுள்ளார். அதில் 46 சார்பதிவாளர்களால் தவறான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தொடர்புடைய பதிவு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்.

ஸ்டார் 2.0 மென்பொருள்

அசையா சொத்துகள் தொடர்பான பத்திரப் பதிவின்போது, சர்வே உட்பிரிவு செய்ய தேவை எழாத சொத்துகள் தொடர்பாக ஸ்டார் 2.0 மென்பொருளில் செய்யப்பட்ட மாற்றங்கள் அடிப்படையில், பத்திரப்பதிவு முடிந்த நிலையில், அந்த பத்திரம் இணைய வழி பட்டா மாறுதலுக்கு தகுதியானது அல்ல என்பது தெரியவந்தால், அதில் உள்ள இணையதள வழி பட்டா மாறுதலுக்கான விருப்பத்தேர்வை நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால் எதிர்பாராத தவறுகள் தடுக்கப்படும்.

இதன் பின்னரும் இணையவழி பட்டா மாற்றம் தொடர்பாக சார்பதிவாளரால் கணினி வழி ஒப்புதல் வழங்கப்படும் நிகழ்வுகளில் தவறாக ஒப்புதல் வழங்கப்படுவதாக கவனத்துக்கு வந்தால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT