திருச்சி அருகே சிறுகனூரில் இன்று (மார்ச் 7) திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தமிழகத்துக்கான தொலைநோக்குத் திட்டங்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்.
திருச்சியை அடுத்த சிறுகனூரில் திமுக சார்பில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற தலைப்பிலான பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. காலை11 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சிக் கொடி ஏற்றி வைத்து பொதுக்கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதன்பின் பிரச்சார காணொலிகள், மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த காணொலிகள் ஒளிபரப்பப்படஉள்ளன.
மாலையில் நடைபெறும் நிகழ்வில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வரவேற்றுப் பேசுகிறார். அதன்பிறகு பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி ஆகிய துறைகளின் தற்போதைய நிலைமை குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்கள் விளக்கி பேசுகின்றனர்.
அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை தமிழகத்தின் விடியலுக்கான உறுதிமொழிகள் குறித்தும், தொலைநோக்கு திட்டங்களை வெளியிட்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்துலட்சக்கணக்கான திமுகவினர் பங்கேற்பர் என்பதால், அதற்கேற்ப 700 ஏக்கர் பரப்பளவில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ தொலைவுக்கு வழிநெடுகிலும் கட்சிக் கொடிகள், கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பொதுக்கூட்டத்தில் திமுகமாநில நிர்வாகிகள் ஆ.ராசா, கனிமொழி, தயாநிதிமாறன், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கு.பிச்சாண்டி, ஏ.கே.எஸ் விஜயன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர்.