விவசாயிகள் கொண்டு வரும் நெல்லினை தஞ்சை மாவட்டத்திலுள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாக கொள்முதல் செய்ய வேண்டுமென்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மேட்டூர் அணையிலிருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படாததால் தஞ்சை பகுதியில் குறுவை சாகுபடி பெருமளவு குறைந்துவிட்டது.
குறைந்த அளவே சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்த நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கின்றன. தற்போது, மழைக் காலமாக இருப்பதால் தேங்கி கிடக்கின்ற நெல் மூட்டைகள் நனைந்து நெல் முளைத்து விடும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல் வீணாகி, நெல் மூட்டைகளை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகிதம்தான் இருக்க வேண்டும் என்று கூறி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனர். மழைக்காலங்களில் நெல்லின் ஈரப்பதம் 21 சதவிகிதம் வரை இருக்கலாம் என்பது நடைமுறையில் உள்ளது. ஆனாலும், ஈரப்பதத்தைக் காரணம் காட்டி நெல்லினை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுக்கின்றனர்.
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்து, நெல் மூட்டைகளுக்கு உரிய விலையை பண்டிகை காலத்தை முன்னிட்டு கால தாமதமின்றி வழங்க வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.