தமிழகம்

செல்போன் செயலி மூலமாக ஏமாற்றி சென்னை தொழிலதிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி: மும்பையைச் சேர்ந்த தம்பதி கைது

செய்திப்பிரிவு

செல்போன் செயலி மூலமாக சென்னை தொழிலதிபரை ஏமாற்றி ரூ.16.50 லட்சம் பறித்த மும்பையை சேர்ந்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், ஆன்லைன் டேட்டிங் செயலியில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய ஒரு பெண், தனது புகைப்படம் என்று கூறி ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார்.

அந்த அழகில் கவரப்பட்ட தொழிலதிபர், அந்த பெண் கேட்கும்போது எல்லாம் அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளார். இவ்வாறு வீட்டுக்கு தெரியாமல் ரூ.16.50 லட்சம் வரை செலுத்தினார்.

ஒரு கட்டத்தில், வங்கிக் கணக்கில் இருந்து அதிக பணம் செலவு செய்யப்படுவதை உணர்ந்த குடும்பத்தினர் இதுபற்றி விசாரித்ததும், தொழிலதிபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, தங்களை ஏமாற்றி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் அவர்கள் புகார் கொடுத்தனர். அந்த பெண் குறிப்பிட்டுள்ள முகவரி மற்றும் வங்கிக் கணக்குகள் மும்பையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் அந்தமுகவரிக்கு தமிழக போலீஸார்சென்றுள்ளனர். சுதாரித்துக்கொண்ட அந்த பெண், மர்ம நபர்கள் சிலர் தன் வீட்டுக்குள் புகுந்து நகை திருட முயன்றதாக உள்ளூர் போலீஸில் புகார் கொடுக்க, தமிழக போலீஸாரை மும்பை போலீஸார் பிடித்துள்ளனர். தமிழக போலீஸார் என்று தெரிந்த பிறகு, அவர்களை விடுவித்துள்ளனர்.

அந்த பெண் குறித்து மும்பை போலீஸாரும் விசாரணை நடத்த, வேறொரு மோசடியிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பெண் மற்றும் கணவரை மும்பை போலீஸார் கைது செய்து, தமிழக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து தமிழக போலீஸார் சென்று இருவரையும் கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவர்களது பெயர் யாசிம்கான் ரசூல் பெக், திபான்கர் காஸ்னிவாஸ். கணவன் - மனைவியான அவர்கள், டேட்டிங் செயலி மூலம் பலரை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவர்களது வங்கிக் கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடக்கியுள்ளனர்.

SCROLL FOR NEXT