வரி வருமானத்தை மட்டும் நம்பி இருந்தால் நாடு வல்லரசு ஆகாது என்று முன்னாள் குடியரசு தலைவர்அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 44-வதுபுத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. நேற்றைய நிகழ்வில் ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசு எழுதிய ‘ஐ சிஷெல் டு சைன்’ என்ற புத்தகத்தை இளங்கோ ராமானுஜம் வெளியிட திருச்செந்தூரன் பெற்று கொண்டார்.
நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் பங்கேற்று "பொருளாதாரமும் ஆட்சி முறை நிர்வாகமும் - மீட்க என்ன வழி" என்ற தலைப்பில் பேசியதாவது:
ஒரு நாட்டை வரி வருமானத்தில் வளர்ச்சி அடைய செய்ய முடியாது.விவசாய தன்னிறைவு பெற்று பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே நாட்டை வளர்ச்சி பெற்ற நாடாக கூற முடியும்.
வீழ்ந்த பொருளாதாரம், வீழ்த்தப்பட்ட பொருளாதாரம் என இரு வகை உண்டு. ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு கொள்கைஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் வீழ்ந்து கிடக்கிறது.
மத்திய, மாநில அரசுகள் வரி சுமையை மக்கள் தலையில் திணித்து அதன் மூலம் வளர்ச்சி பெறலாம் என தவறாக நினைக்கிறது. 2020-ல் இந்தியா வல்லரசு பெறும் என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கனவு கண்டார்.
அதன்படி பல அறிவுசார்ந்த வல்லுநர்களை உருவாக்கினார்.ஆனால், ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது வரியை மட்டுமே நம்பியிருந்தால் வல்லரசு ஆக முடியாது. பல வழிகளும் தன்னை தற்காத்து கொள்ள வேண்டும்.
‘பயோ வார்’ எதிர்கொண்டு விட்டோம். ஆனால், ‘சைபர் வார்’ எதிர்கொண்டால் பொருளாதாரம் துண்டு துண்டாகிவிடும்.
இன்று ரூ.15 லட்சம் கோடி வரி வருவாயை கொண்டு ரூ.30 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடுகின்றனர். ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ.200 லட்சம் கோடியாக உள்ளது.
இதில், 80 சதவீதம் கடனாக உள்ளது. இந்த சூழலை வைத்து கொண்டு நம்மால் எப்படி வல்லரசாக முடியும். எப்போது, ஒரு நாட்டின் தனி நபர் வருமானம் உயருகிறதோ அப்போதுதான் லஞ்சம் ஒழிந்து நேர்மையாக ஊழியர்கள் பணிபுரிய முடியும். தமிழகத்தில் 2 சதவீதமே உள்ள 14 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 44 சதவீதம் வரி வருமானத்தை செலவிட வேண்டியுள்ளது. இதை எப்படி சரிசெய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாவிட்டால் லஞ்சத்தை அறவே ஒழிக்க முடியாது.
ஆனால், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீட்டிய ‘தொலைநோக்கு திட்டம் 2023‘ காரணமாக விவசாயம் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட விவசாய பொருட்களின் மூலமாக வளர்ச்சி சதவீதம் 20 முதல் 21 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான் விவசாய உற்பத்தியில் சீனாவுக்கு நிகராக திகழ்ந்தது. எனவே,வளமான தமிழகம் அமைய அறிவுசார்ந்தவர்கள் ஆட்சியில் அமர்ந்து உங்களுடைய தலைவிதியை நிர்ணயிப்பவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில், பபாசி முன்னாள் தலைவர் எஸ்.வைரவன் வரவேற்க பபாசி நிர்வாகக் குழு உறுப்பினர் வி.முனிசாமி நன்றி கூறினார்.
‘இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகரிக்கும்’
நேற்றைய புத்தகக் காட்சி குறித்து பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் கூறுகையில், "கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு புத்தகக் காட்சிக்கு வாசகர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சனிக்கிழமையான நேற்று மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று சுமார் 40 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு 12 லட்சம் பேர் வருகை தந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.