தமிழகம்

மலிவு விலை பருப்பு விற்பனை இன்று முதல் தொடக்கம்: கிலோ ரூ.110-க்கு கிடைக்கும்

செய்திப்பிரிவு

தமிழக அரசு சார்பில் கிலோ ரூ.110-க்கு துவரம் பருப்பு விற்கும் திட்டம் இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 91 கூட்டுறவு அங்காடிகளில் இந்த பருப்பு விற்கப்படும்.

நாடு முழுவதும் துவரம் பருப்பு விலை கடந்த மாதம் கடுமையாக உயர்ந்தது. கிலோ ரூ.118-க்கு விற்கப்பட்டு வந்த துவரம் பருப்பு, ஆயுதபூஜையின்போது, வரலாறு காணாத வகையில் ரூ.225-ஐ எட்டியது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் டன் முழுதுவரையை மத்திய அரசு இறக்குமதி செய்தது. அதில், தமிழகத்துக்கு 500 டன் வழங்கப்பட்டது.

நவம்பர் 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 91 விற்பனை நிலையங்களில் கிலோ ரூ.110-க்கும், அரை கிலோ ரூ.55-க்கும் துவரம் பருப்பு விற்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

குறைந்த விலை பருப்பு விற்பனை இன்று தொடங்குகிறது. சென்னையில் டியுசிஎஸ், வடசென்னை, சிந்தாமணி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் 36 கூட்டுறவு பண்டக சாலைகள், 20 அமுதம் விற்பனை அங்காடிகள் என மொத்தம் 56 விற்பனை நிலையங்கள், மதுரையில் 11 கூட்டுறவு பண்டக சாலைகள், திருச்சியில் 14 பண்டக சாலைகள், கோவையில் 10 விற்பனை அங்காடிகள் என மொத்தம் 91 விற்பனை அங்காடிகளில் குறைந்த விலை துவரம் பருப்பு கிடைக்கும்.

இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘வழக்கமாக கூட்டுறவு பண்டக சாலைகள் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். பருப்பு விற்பனை திட்டம் தொடங்கும் நாளில் (இன்று) காலை 9 மணிக்கே கடைகள் திறக்கப்பட்டு, இரவு 8 மணி வரை செயல்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT